மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஆனந்த் மகேந்திரா அறிவித்துள்ளார்.
நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களி்ல் ஒன்று மகேந்திரா அண்ட் மகேந்திரா. டிராக்டர் தயாரிப்பில் கோலோச்சி வரும் இந்த நிறுவனம் கார், சரக்கு வாகனங்கள் தயாரிப்பிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக ஆனந்த் மகேந்திரா பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில் அவர் அந்த பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் மகேந்திரா தனது டவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘எம் அண்ட் எம் நிறுவனத்தில் பல நிர்வாக ரீதியான மாறுதல்கள் வரவுள்ளன. நிர்வாக தலைவர் பதவியில் இருந்து 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து விலகுகிறேன். பல முக்கியத் நிர்வாகிகள் அடுத்த 6 மாத்தில் பொறுப்பேற்கவுள்ளனர்.
செபி மற்றும் நிறுவனத்தின் வாரிய வரையறைகளுக்கு உட்பட்டு இது நடைபெறுகிறது. எம் அண்ட் எம் நிறுவனம் தொடர்ந்து தனது தனித்தன்மையையும், நன்மதிப்பையும், ஒழுக்கத்தை தொடர்ந்து பராமரிக்கும்’’ எனக் கூறியுள்ளார். அதேசமயம் நிர்வாக ரீதியாக அல்லாத தலைவராக அவர் தொடர்ந்து நிறுவனத்தை வழிகாட்ட உள்ளார்.
அதேசமயம் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள கோனேகா 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி பதவி ஓய்வு பெறும்போது அந்த இடத்துக்கு அனீஷ் ஷா நியமிக்கப்படுவார் எனவும் தெரிகிறது. அதுவரை அந்த பதவியில் கேனேகா தொடருவார்.