இந்தியா பொருளாதார ரீதியாக மிகத் தீவிரமான நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. கிட்டத்தட்ட அபாயகரமான நிலையை நோக்கி இந்தியப் பொரு ளாதாரம் சென்று கொண்டிருக்கிறது என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டு இருப்பது சாதாரண பொருளாதார நெருக்கடி நிலை அல்ல; மிகத் தீவிரமான பொருளாதார நெருக்கடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் சவால்
அரவிந்த் சுப்பிரமணியன் மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்தின் இந்திய அலுவலகத்தின் முன்னாள் தலைவர் ஜோஷ் ஃபெல்மேன் இருவரும் இணைந்து சமீபத்தில் எழுதிய ஆய்வு இதழில் இந்தியா வின் பொருளாதார நிலை குறித்து கூறியிருப்பதாவது: ‘வங்கிகள், உள்கட்டமைப்பு, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் போன்ற துறைகள் சார்ந்து இந்தியா பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடி சூழலுக்குப் பிறகு, இந்தியாவில் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி பாதிக்கத் தொடங்கின. தற்போது அந்த இரண்டோடு சேர்த்து மூன்றாவது காரணியாக நுகர்வு திறன் சரிவும் இணைந் துள்ளது. இவற்றின் விளைவாகவே பொருளாதாரம் தொடர்ந்து சரிவைக் கண்டுவருகிறது.
ஜிஎஸ்டி-யை உயர்த்தக் கூடாது
நிறுவனங்கள் அதன் கடன்களுக்கு செலுத்தும் வட்டி, அதன் வருவாயை விட அதிகமாக உள்ளது. இது மிக ஆபத்தான போக்கு என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சரிவிலிருந்து பொருளா தாரத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் வகையில் அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில் வழக்கமான பேரியல் பொருளாதார நடவடிக்கைகள் பலன் தராது என்று தெரிவித்தார். தற்போதைய சூழலில் தனி நபர் வருமான வரியை அரசு குறைக் கவோ, ஜிஎஸ்டி விகிதத்தை உயர்த் தவோ கூடாது. அது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். ஜிஎஸ்டியினால் நுகர்வு பரவலாக குறைந்துள்ள நிலையில், அரசின் வரிவருவாய் குறைந்துள்ளது. எனவே தனி நபர் வருமான வரி குறைப்பு, ஜிஎஸ்டி உயர்வு போன்ற வற்றை அரசு மேற்கொள்ளக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தி, நுகர்வு, வேலைவாய்ப்பு, வங்கிகளின் நிதி நிலை போன்றவை தொடர்பாக துல்லியமான புள்ளிவிவரங்களை சேகரிக்க வேண்டும். அதை அடிப் படையாகக் கொண்டே தெளிவான நிதிக் கொள்கைகளை உருவாக்க முடியும் என்று கூறினார்.
ரியல் எஸ்டேட் கடும் சரிவு
பண மதிப்பிழப்பு நடவடிக் கைக்குப் பிறகு மக்களிடம் புழக்கத் தில் இருந்த பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்துவிட்டன. அவை வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு கடனாக வழங்கப்பட்டன. அந்நிறு வனங்கள் அந்தப் பணத்தை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடனாக அளித்தன. தற்போது ரியல் எஸ்டேட் பெரும் சரிவை சந்தித்துள்ளதால், அந் நிறுவனங்களால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறு வனங்கள் இரண்டும் கடும் பாதிப் புக்கு உள்ளாகி இருக்கின்றன. அவற்றின் நிதி நிலைகளை துல்லியமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
கடந்த சில மாதங்களாக முக்கிய துறைகளின் உற்பத்தி எதிர்நிலைக்கு (-) சென்றுள்ளன. இது மிக அபாயகரமான அறிகுறி. தற்போது ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி நிலை, 1991-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைக்கு நெருக்கமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.