திவால் நடவடிக்கை சட்டத்தின் இரண்டாம் திருத்த மசோதாவை (2019), மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களை வாங்கும் வெளி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட கால அளவில் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி, தொடர்ந்து செயல்பட முடியாமல் இருக்கும் நிறுவனங்கள் திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. வெளி நிறுவனங்கள் அந்த திவாலான நிறுவனங்களை வாங்க முன்வருகையில், சட்ட ரீதியாக நடைபெற்று வரும் திவால் நடவடிக்கையால் வாங்கும் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
மட்டுமல்லாமல், அந்நிறுவனத்தின் மீதான சட்ட நடவடிக்கையால் அதை வாங்கும் நிறுவனங்கள் நிச்சயமற்ற நிலைக்கு ஆளாகின்றன. திவால் நிறுவனத்தின் மீதான சட்ட நடவடிக்கைகள் எதுவும், அதை வாங்கும் நிறுவனத்தை பாதிக்கக் கூடாது என பல நிறுவனங்களின் தலைவர்கள் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில், திவால் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் திவால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இதற்கான மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது திவால் சட்டத்தின் இரண்டாவது திருத்த மசோதாவாகும்.