2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தங்கள் தயாரிப்பு கார்களின் விலையை உயர்த்தப்போவதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வாகனங்களின் விற்பனை சரிந்து வருவதால் தயாரிப்பு நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. வாகன விற்பனை அளவு தொடர்ந்து மோசமான அளவில் சரிந்துள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை நிறுத்தி விட்டன. இதன் விளைவாக வாகனத் துறை சார்ந்த பணியாளர்கள் வேலை இழக்கும் சூழல் உள்ளது.
இந்தநிலையில், வாகனத் தயாரிப்பில் அரசு புதியக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் விற்பனை செய்யப் படும் அனைத்து வாகனங்களும் பிஎஸ்6 விதிகளை பின்பற்றி தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கார்களில் ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பாது காப்பு வசதிகள் அனைத்து கார் களிலும் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதனால் வாகனங்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வரும் ஜனவரி முதல் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்தப்போவதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவிக்கையில் ‘‘கடந்த ஓராண்டாகவே கார் தயாரிப்பு உதிரி பாகங்களின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதுதவிர வரி உட்பட பிற வகையிலும் தயாரிப்புச் செலவு அதிகரித்துள்ளது.
இதனால் வேறு வழியின்றி கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம். வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் மாருதி கார்களின் விலை அதிகரிக்கப்படுகிறது. பல்வேறு மாடல் கார்களை பொறுத்து விலை மாறுபடும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என மாருதி நிறுவனம் தெரிவிக்கவில்லை.
மாருதி நிறுவனத்தின் கார்கள் டெல்லியில் ஷோரூம் விலைப்படி ரூ.2.89 லட்சம் முதல் ரூ. 11.47 லட்சம் வரை பல்வேறு மாடல்களுக்கு ஏற்ற விலையில் விற்கப்படுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிக வரி, ஜிஎஸ்டி, மாநில அரசுகளின் சாலை மற்றும் வாகனப் பதிவுக் கட்டண உயர்வு போன்ற காரணங்களாலும் கார்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் வாகனங்கள் வாங்கு வதை தவிர்த்து வருகின்றனர்.