ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களில் புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு கூடுதலாக 6 நாட்கள் விடுமுறை வழங்க முடிவு செய்துள்ளது. டோக்கியோவில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனம் பியாலா.
இந்நிறுவனம் ஒரு கட்டிடத்தின் 29-வது மாடியில் உள்ளது. இந்நிறுவனத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஊழியர்கள் அலுவலக நேரத்தில் புகைப்பிடிக்க செல்கின்றனர்.
புகைப்பிடிக்க வேண்டுமெனில் கட்டிடத்தின் அடித்தளத்துக்குத்தான் வந்து செல்ல வேண்டும். ஒருவர் வந்து புகைப்பிடித்துவிட்டு செல்ல 15 நிமிடம் குறைந்தபட்சம் ஆகும். ஆனால், அத்தகைய நேரங்களில் புகைப்பழக்கம் இல்லாதவர்கள் அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள்.
இந்த நேர இடைவெளியை சமப்படுத்தும் வகையில், புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு 6 நாட்கள் கூடுதலாக விடுமுறை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க புகைப்பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதை விட, புகைப்பிடிக்காதவர்களுக்கு சலுகைகள் வழங்குவதன் மூலம் செயல்படுத்த முயற்சித்துள்ளதாக அந்நிறுவன சிஇஓ டகாவோ அசுகா தெரிவித்தார். ஜப்பானில் புகைப்பிடிப்பதை குறைக்க அரசும் தனியாரும் பலத்த முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.