அமெரிக்காவின் இருசக்கர வாகன ஜாம்பவான் என கருதப்படும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் முதன்முறையாக விற்பனையகத்தை இன்று தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள் ஹார்லி டேவிட்சன். அமெரிக்காவில் இரண்டு கார்களை வைத்திருப்பதை விட ஒரு ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவருக்குத்தான் அந்தஸ்து அதிகம். இந்தியாவிலும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வந்த பிறகு இதை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இதற்கான விலையில் ஒரு செடான் காரை வாங்கி விடலாம். ஆனாலும் வங்கிகளில் அளிக்கப்படும் சுலபத் தவணை, மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு போன்றவை ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு களம் அமைத்துத் தந்துள்ளன.
இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளுக்கான விற்பனை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பெரு நகரங்களில் தனது பிரத்யேக விற்பனையகத்தை அமைத்து வருகிறது.
தற்போது இந்தியாவில் 26 விற்பனையகங்கள் உள்ளன. இந்த விற்பனையகங்களில் பிராண்டுகளின் பிற தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் ஜம்மு நகரில் முதன்முறையாக தனது டீலர் மூலம் விற்பனை நிலையத்தை ஹார்லி டேவிட்சன் இன்று தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர ராஜசேகரன் கூறுகையில் ‘‘காஷ்மீரில் இருசக்கர வாகனங்களுக்கு என தனியான சந்தை உள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் குறி வைத்தே ஜம்மு நகரில் விற்பனையகத்தை தொடங்கியுள்ளோம்’’ எனக் கூறினார்.