இதுவரை திவால் நடை முறைக்குள் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவந்த நிலையில், தனிநபர்களும் திவால் நடைமுறைக்கு விண்ணப்பிக்கும் திட்டம் டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த திவால் வாரியத்தின் தலைவர் எம் எஸ் சாஹூ கூறியதாவது, நிதி நெருக்கடிக்கு ஆளான நிறுவனங்கள் தங்களை திவால் சட்டத்தின்கீழ் இணைத்துக்கொண்டு தீர்வு காணும் நடவடிக்கை கடந்த மூன்றாடுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சில முக்கிய நிறுவனங்களின் திவால் நிலைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
தற்போது, இந்த திவால் சட்டம் தனிநபர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நிறுவன கடன்களுக்கு உத்தரவாதம் அளித்தவர்கள் இந்தச் சட்டத்தின் கீழ் தீர்வு காணலாம். மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் பார்ட்னர்ஷிப், புரொப்பரிட்டர்ஷிப் நிறுவனங்களும் மற்றும் பிற தனிநபர்களுக்கான திவால் நடவடிக்கை முறைகளையும் திட்டமிட உள்ளோம் என்றார்.
தனிநபர்களுக்கான திவால் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதன் மூலம் திவால் சட்டம் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது என்று அவர் கூறினார். இதன் மூலம் ஏற்கெனவே திவால் நடவடிக்கையில் இருக்கும் நிறுவனத்துக்கு கடன் உத்தரவாதம் அளித்த நிறுவனமோ அல்லது தனி நபரோ தாங்களும் திவால் நடவடிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவால் சட்டத்தின்கீழ் மிகப்பெரிய வழக்குகளாக எஸ்ஸார் ஸ்டீல், டிஹெச்எஃப்எல் ஆகியவை உள்ளன. எஸ்ஸார் ஸ்டீல் வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு திருப்பு முனையாக அமைந்தது. டிஹெச் எஃப்எல் என்சிஎல்டிக்கு மாற்றப்பட்டுள்ளது.