வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல் தங்க நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை கட்டாயமாகிறது என நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.
தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுதற்கான அதிகாரப்பூர்வ வழங்கப்படும் முத்திரை ஹால்மார்க் எனப்படுகிறது. பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பால் 2000-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் ஹால்மார்க் முத்திரை, நுகர்வோர்கள் தரக்குறைவான தங்க நகைகள் வாங்கி ஏமாற்றம் அடைவதை தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படுகிறது.
ஹால்மார்க் முத்திரை என்பது தற்போதைய நிலையில் கட்டாயமானதல்ல. தாமாக முன்வந்து கேட்கும் நகைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்க நகைகள் வாங்கும்போது ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை வாங்குதன் மூலம் தங்கத்தின் சுத்தத்தன்மைக்கு உத்தரவாதம் பெறும் நிலை இருந்து வருகிறது.
இந்தநிலையில் தங்க நகை விற்கும்போது ஹால் மார்க் முத்திரையை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:
‘‘வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல் தங்க நகைகளுக்கு ஹால் மார்க் முத்திரை கட்டாயமாகிறது. இதற்கான அறிவிக்கையை 2020-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த ஓராண்டில் தங்க நகை வியாபாரிகள் தங்களிடம் உள்ள கையிருப்பை விற்று விடலாம். அதற்கு பிறகு 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் ஹால்மார்க் தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும்’’ எனக் கூறினார்.