வணிகம்

பொருளாதார தேக்கநிலையிலிருந்து இந்தியாவை மீட்க உட்கட்டமைப்பில் 3 மடங்கு முதலீடு தேவை: தரச்சான்று நிறுவனம் கிரிஸில் தகவல்

செய்திப்பிரிவு

பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இந்தியா மீள வேண்டுமென்றால், நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் அதிக அளவு முதலீடு மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால், இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து தேக்க நிலையிலேயே இருக்கும் என்று பொருளாதாரம் மற்றும் தொழில்துறை ஆலோசனை நிறுவனமான கிரிஸில் தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த வளர்ச்சி 7.5 சதவீத அளவை எட்ட வேண்டும் என்றால் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.235 லட்சம் கோடி (3.3 டிரில்லியன் டாலர்) அளவில் உட்கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் கூறி உள்ளது. இது தற்போது இருக்கும் அளவைவிட 3 மடங்கு அதிகம் ஆகும்.

இந்தியப் பொருளாதாரம் மிகக் கடுமை யான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி வீதம் கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. சமீப காலகட்டத் தில் மக்களின் வாங்கும் திறன் வெகுவா கக் குறைந்துள்ளது. இதனால் நிறுவனங் களின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு, வேலையின்மை கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் முதலீடுகள் பெரும் அளவில் குறைந்துள்ளன.

தற்போதைய நிலையில் இந்தியா அதன் வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டுமென்றால் முதலீடுகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். எனில், அதற்கான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதும் மேம்படுத்துவதும் மிகவும் அவசியம். உட்கட்டமைப்பு சார்ந்து 50 சதவீத முதலீடு மேற்கொள்ளாவிட்டால், இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்து தேக்க நிலையில் இருக்கும் என்று கிரிஸில் தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் நெடுஞ்சாலை துறைகள் குறிப்பிட்ட அளவில் முதலீடுகளை ஈர்க்கக் கூடியதாக இருந்து வருகிறது என்றும் கிரிஸில் கூறி உள்ளது.

SCROLL FOR NEXT