வணிகம்

அனில் அம்பானி ராஜினாமாவை ஏற்க முடியாது: திவால் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்

செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தலைவர் அனில் அம்பானியின் ராஜினாமா கடிதத்தை, நிறுவனத்தின் கடனாளர்கள் குழு ஏற்க மறுத்துள்ளது.

தவிர அவருடன் விண்ணப்பித்து இருந்த 4 இயக்குநர்களின் ராஜினாமாவையும் அக்குழு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த நிலையில்,அந்நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம்அதன் தலைவர் அனில் அம்பானி அவரது இயக்குநர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அவருடன் சாயா விராணி, ரைனா கராணி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காச்சர் ஆகிய நான்கு இயக்குநர்களும் தங்கள் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய கடிதம் அளித்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்கள் அனைத்தும் நிறுவனத்தின் கடனாளர்கள் குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் அவர்களின் ராஜினாமாவை ஏற்க கடனாளர்கள்குழு மறுத்து உள்ளது. அவர்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்துகொண்டு திவால் நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. செப்டம்பர் மாதம் முடிந்த நடப்பு நிதிஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ரூ.30,142 கோடி நஷ்டத்தை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் சொத்துகளை விற்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. கடனாளர்கள் குழு சொத்துகளை விற்று கடன்களை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், சொத்துகளை விற்பனைசெய்வதில் ஆர்காம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக ஏர்டெல்குற்றம் சாட்டியது. இதையடுத்து, ஏர்டெல் நிறுவனம் சொத்துகளை வாங்குவதிலிருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT