முன்னணி நிலக்கரிச் சுரங்க நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பங்கு விற்பனை மூலம் ரூ.23,000 கோடி முதல் ரூ. 24,000 கோடி முதலீடு திரட்ட திட்டம் வைத்துள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் 10 சதவீத பங்குகளை (ரூ.10 முகமதிப்பில் 63,16,36,440 பங்குகள்) விலக்கிக் கொள்ள உள்ளது. ஆபர் பார் சேல் முறையில் பங்குச் சந்தை மூலம், செபியின் வழிகாட்டுதல்கள்படி இந்த பங்கு விற்பனை நடைபெறும் என்று பங்கு விலக்கல் துறை அறிக்கையில் கூறியுள்ளது.
இதற்கான விண்ணப்ப கடைசி தேதி செப்டம்பர் 02 எனவும் குறிப்பிட்டுள்ளது. மெர்சண்ட் வங்கிகள் மற்றும் பங்கு விற்பனை தரகர்கள் வழி இந்த விற்பனை நடக்க உள்ளது. முக்கியமாக தேர்தெடுக்கப்பட்ட ஐந்து முகவர்கள் அல்லது மெர்ச்சண்ட் வங்கிகள் இந்த பங்கு விற்பனையை கவனிப்பார்கள் எனவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தில் தகுதிவாய்ந்த பணியாளர்கள் இந்த பங்கு விற்பனை நடவடிக்கையில் கலந்துகொள்வார்கள் என்றால் அவர்களுக்கு பங்குகளை ஒதுக்கவும் அரசு பரிசீலித்துள்ளது. பணியாளர்களுக்கு பங்கு விற்பனை தொகையில் அதிகபட்சமாக 5 சதவீத சலுகை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. ஆபர் பார் சேல் முறையில் அதிகபட்சமாக 5 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட உள்ளன. பணியாளர்கள் ரூ. 2 லட்சம் வரை பங்குகளை வாங்க விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
2015 ஜூலை 27 நிலவரப்படி சந்தை மதிப்பில் நான்காவது பெரிய நிறுவனமாக கோல் இந்தியா உள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,67,782.27 கோடியாக உள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு கோல் இந்தியா நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை ரூ.22,557 கோடிக்கு விற்பனை செய்தது.
இது தொடர்பாக பேசிய கோல் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் மத்திய அரசின் இந்த அறிவிப்பு காரண மாக தொழில்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடும் வாய்ப்புள்ள தாகக் குறிப்பிட்டனர்.