வணிகம்

சென்செக்ஸ் 151 புள்ளிகள் உயர்வு: நிப்டி 8567 புள்ளிகளைத் தொட்டது

பிடிஐ

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று ஏற்றமான வர்த்தகம் நிலவியது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 151 புள்ளிகள் ஏற்றம் கண்டு 28223 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச் சந்தையான நிப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 8567 புள்ளிகள் வர்த்தகம் முடிந்துள்ளது.

கடந்த இரண்டு வார வர்த்தகத்தில் சந்தை நேற்று உச்சபட்ச புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) பங்குகள் லாபத்தைக் கண்டுள்ளன. இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி, விப்ரோ பங்குகள் உயர்ந்து முடிந்துள்ளன. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு எதிர்பார்ப்பு காரணமாக டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஐடி துறை பங்குகள் ஏற்றத்தைக் கண்டுள்ளன.

இதன் காரணமாகவே சந்தை நேற்று உயர்ந்தது என்று சந்தை நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை அறிவிப்பு காரணமாக இறங்கிய சந்தை தற்போது மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.80 சதவீதம் முதல் 1 சதவீதம்வரை ஏற்றம் கண்டது. மும்பை பங்குச் சந்தையின் நேற்றைய வர்த்தகத்தில் 1799 பங்குகள் லாபத்தையும், 1155 பங்குகள் நஷ்டத்தையும் கண்டன. வங்கி மற்றும் உலோகத்துறை குறியீடுகள் சரிந்தன.

நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்ட பங்குகள் ஜீ எண்டெர்டெயின்மெண்ட் 2.80%, விப்ரோ 2.77%, இன்ஃபோசிஸ் 2.75%, பஜாஜ் ஆட்டோ 2.58%, லுபின் 2.43%. சரிவைக் கண்ட பங்குகள் யெஸ் வங்கி 1.31%, டாடா மோட்டார்ஸ் 1.14%, கோல் இந்தியா 1.11%, எஸ்பிஐ 1.11%, பேங்க் ஆப் பரோடா 1.07%.

சர்வதேச பங்குச் சந்தைகளிலும் நேற்று சாதகமான வர்த்தக சூழலே இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என்கிற எதிர்பார்ப்பின் காரணமாக டாலர் மதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. டாலருக்கு நிகரான இதர கரன்ஸி மதிப்புகள் குறைந்துள்ளன. நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 பைசா வரை சரிந்தது. வர்த்தக நேர முடிவில் ரூ.63.75 என்கிற மதிப்பில் இருந்தது.

SCROLL FOR NEXT