இந்தியா அதன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு கடைபிடித்து வரும் சலுகை திட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று உலக வர்த்தக அமைப்பு கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து நேற்று முன்தினம் (நவம்பர் 19) இந்தியா மேல் முறையீடு செய்துள்ளது.
இந்தியா தனது உள்நாட்டு ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்க சில சலுகை திட்டங்களின் வழியே ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கி வருகிறது. இதனால் உலகளாவிய சூழலில் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கின்றன. எனவே இந்தியா அந்த திட்டங்களை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளித்தது.
அதை விசாரித்த உலக வர்த்தக அமைப்புக் குழு, இந்தியா சர்வதேச வர்த்தக விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். தற்போது இந்தியா கடைபிடித்து வரும் எம்இஐஎஸ், இபிசிஜி திட்டம் போன்றவை விதிமுறைகளுக்கு புறம்பானவை. அந்த திட்டங்களை இந்தியா 120 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று கடந்த அக்டோபர் 31-அன்று அறிக்கைவெளியிட்டது. இந்நிலையில் நேற்றைய முன்தினம் டபிள்யூடிஓ-வின் முடிவை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.
டபிள்யூடிஓ எனப்படும் உலக வர்த்தக அமைப்பு, உலக நாடுகளிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும் பொருட்டு 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பின்தங்கிய நாடுகள், வளரும் நாடுகளின் வர்த்தகத்தை மேம்படுத்த சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த பட்டியலில் உள்ள நாடுகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரிச் சலுகை போன்றவை வழங்கப்படுகிறது.
தவிர அந்நாடுகளும் அதன் ஏற்றுமதியை அதிகரிக்க குறிப்பிட்ட திட்டங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றன. இதன்படி, இந்தியா அதன் ஏற்றுமதியை அதிகரிக்க எம்இஐஎஸ், இபிசிஜி திட்டங்களை உருவாக்கி, அதன் மூலம் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கி வருகிறது. ஆனால், இந்தியாவின் தனி நபர் தேசிய வருமானம் ஆண்டுக்கு 1000 டாலரை தாண்டி விட்டது.
எனவே, இந்தியா ஏற்றுமதி தொடர்பான சலுகைகள் வழங்கக் கூடாது, அது விதிமீறல் என்று அமெரிக்கா முறையிட்டது. சிறப்பு பிரிவின்கீழ் இந்தியாவுக்கு அந்த உரிமையை வழங்கவேண்டும் என்று இந்திய தரப்பில் கோரப்பட்டது. இந்தியாவின் அந்த கோரிக்கையை தள்ளுபடி செய்த டபிள்யுடிஓ, இந்தியா செயல்படுத்தி வரும் விதிமுறைக்கு புறம்பானதிட்டங்களை கைவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக இந்திய அரசு தரப்பில்கூறியதாவது: ‘இந்தியா எம்இஐஎஸ் போன்ற திட்டங்களுக்குப் பதிலாக அனுமதிக்கப்பட்ட திட்டங்களை கடைபிடிப்பது குறித்துபரிசீலித்து வருகிறது. வேறு சில திட்டங்களுக்கு நிச்சயம் அனுமதி வழங்க வேண்டும். அது தொடர்பாக இந்தியா சட்ட முயற்சியில் ஈடுபடும்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.