இன்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் 9,300 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் 12,600 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டிருக்கிறது. கடந்த ஏழு வருடங்கள் இல்லாத அளவுக்கு முதல் அரையாண்டில் இது கூடுதல் நிதி ஆகும்.
இதுவரை பிஎப்சி, ஆர்இசி மற்றும் டிரெட்ஜிங் கார்ப் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 3,300 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் இதுவரை மூன்று நிறுவனங்களின் பங்கு களை விலக்கி நிதி திரட்டி இருக்கிறோம். இன்று நான்காவது நிறுவனத்தின் பங்குகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
நடப்பு நிதி ஆண்டில் முதல் அரையாண்டு முடிவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிற சூழ்நிலையில் கடந்த ஏழு வருட முதல் அரையாண்டில் நடப்பு ஆண்டில்தான் கூடுதல் நிதி திரட்டப்பட்டிருக்கிறது என்று பங்குவிலக்கல் துறை செயலாளர் ஆராதனா ஜோஹ்ரி தெரிவித்தார்.
கடந்த 2014-15 நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங் களில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்கும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. அதற்கு முந்தைய நிதி ஆண்டான 2013-14ம் ஆண்டில் ஆறு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 1,300 கோடி திரட்டப்பட்டது.
2012-13ம் நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எந்த பங்குவிலக்கலும் நடைபெறவில்லை. 2011-12ம் நிதி ஆண்டின் முதல் பாதியில் ரூ.1,500 கோடி திரட்டப்பட்டது. 2010-11ம் நிதி ஆண்டில் ரூ.2,400 கோடி திரட்டப்பட்டது. 2009-10ம் நிதி ஆண்டில் ரூ.4,200 கோடி திரட்டப்பட்டது.
நடப்பு நிதி ஆண்டில் இன்னும் 20க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குவிலக்கலை மேற்கொள்ள பங்குவிலக்கல் துறை திட்டமிட்டிருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் சீனா யூவான் சரிவு, கிரீஸ் பிரச்சினை, அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு ஆகிய காரணங்களால் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்க மான சூழல் நிலவுகிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை சென் செக்ஸ் 3 சதவீதம் சரிந்திருக் கிறது.