வணிகம்

வேலை செய்யாத ஜிஎஸ்டி இணையதளம்: ட்விட்டரில் வறுத்தெடுத்த வர்த்தகர்கள்

செய்திப்பிரிவு

ஜிஎஸ்டிஆர் 3பி மாதாந்திர கணக்கு தாக்கல் செய்ய நாளையு கடைசி நாள் என்ற நிலையில் அதற்கான இணையதளம் வேலை செய்யாததால் வர்த்தர்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக தாக்கல் செய்யவேண்டிய ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்ய கடைசி தேதி நவம்பர் 30-ம் தேதியாக இருந்தது. ஆனால் தாக்கல் செய்வதில் உள்ள பல்வேறு குளறுபடி காரணமாக, 2018-19-ம் நிதி ஆண்டுக் கான படிவத்தை தாக்கல் செய்வதற் கான கடைசி தேசி டிசம்பர் 31- ஆக நீட்டிக்கப்பட்டது.

அதேபோல 2019-20-ம் நிதி ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்ய அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வரி விதிப்பில் சமரச மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜிஎஸ்டி மாதந்திர கணக்கிற்கான ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் தாக்கல் செய்ய நாளைய தினம் கடைசி நாளாகும். ஒரே ஒரு நாள் மட்டுமே மீதியுள்ளதால் ஜிஎஸ்டி இணையதளத்தில் இன்று காலை முதல் வர்த்தகர்கள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்து வந்தனர்.

ஆனால் ஜிஎஸ்டி இணையதளம் உரியமுறையில் வேலை செய்யவில்லை. பலமுறை விவரங்களை பதிவிட்டு தாக்கல் செய்ய முற்பட்டபோதும் பலன் கிடைக்கவில்லை. இதனால் ஜிஎஸ்டி தாக்கல் செய்வோர் பெரும் துன்பத்திற்கு ஆளாகினார்.

இதைத்தொடர்ந்து சமூகவலைதளமான ட்விட்டரில் வர்த்தகர்கள் தங்கள் ஆதங்கங்களை கொட்டித் தீ்ரத்தனர். ஜிஎஸ்டி கணக்கு தாக்கலுக்காக சிறப்பு ஏற்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சாதாரண படிவங்களை கூட தாக்கல் செய்ய முடியவில்லையே என ட்விட்டர் பக்கத்தில் மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்தனர். சிலர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டேக் செய்தும் தங்கள் மன வருத்தங்களை வெளிப்படுத்தினர்.வேறு சிலர் கடைசி நாளை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT