வணிகம்

மூன்று ஆண்டுகளில் 860 கோடி டாலர் முதலீடு: எல்.ஜி. அறிவிப்பு

ஐஏஎன்எஸ்

தென்கொரியாவின் மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள எல்ஜி நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 860 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ஒஎல்இடி தொழில்நுட்பத்திலான டிவி-க்களைத் தயாரிக்க இந்த முதலீடு செய்யப்படுவதாக நிறுவனத்தின் இந்தியப் பிரிவு இயக்குநர் ஹோவர்ட் லீ தெரிவித்தார்.

ஒஎல்இடி எனப்படும் தொழி்ல்நுட்பத்திலான டிவிக்களில் உள்ள பிக்சர் டியூப் டையோடு மிகச் சிறந்த துல்லியமான படப் பதிவுகளை அதிநுட்பமான வண்ணத்தில் வெளிப்படுத்தக் கூடியது.

2013-ம் ஆண்டில் ஓஎல்இடி நுட்பத்திலான டிவிக்களின் விற்பனை ஆண்டுக்கு 5 ஆயிரமாக இருந்தது. 2016-ம் ஆண்டு இறுதியில் இத்தகைய தொழில்நுட்பத்திலான டிவிக்களின் தேவை 10 லட்சமாக அதிகரிக்கும் என்றார்.

4 கே ரெசல்யூஷன்

சர்வதேச அளவில் ஓஎல்இடி டிவிக்களின் தேவையில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீதம் முதல் இரண்டு சதவீத அளவுக்கே உள்ளது. உயர் தொழில்நுட்பத்தை விரும்பும் இந்திய வாடிக்கை யாளர்களுக்காக இத்தகைய டிவிக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதாக அவர் கூறினார்.

4 கே ரெசல்யூஷன் கொண்ட 2 புதிய மாடல் டிவிக்களை நேற்று அவர் அறிமுகப்படுத்தினார். இவற்றின் விலை ரூ. 5,79,990 மற்றும் ரூ. 3,84,900 ஆகும்.

4 கே ரெசல்யூஷன் என்பது அதி உயர் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுவது. 4096x2160 பிக்ஸெல் அளவில் இதில் படப் பதிவுகள் மிகத் துல்லியமாகத் தெரியும்.

பிளாட் டிவி-க்களில் மேலும் பெரிய திரைகளைக் கொண்ட டிவிக்களை தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டி.வி.யில் எல்ஜி நிறுவனத்தின் வெப் இயங்குதளம் இருப்பதால் இது ஸ்மார்ட் டி.வி மற்றும் துல்லியமான இசையைக் கேட்க ஹர்மோன் கார்டோன் சவுண்ட் பார் ஆகியன உள்ளன.

இந்நிறுவனம் புணேயில் உள்ள ஆலையில் ஓஎல்இடி டிவிக்களைத் தயாரிப்பதாகவும் இந்த ஆலையின் உற்பத்தித் திறன் சமீபத்தில் இருமடங்கு உயர்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த ஆலை ஆண்டுக்கு 15 லட்சம் டிவிக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருந்தது. விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு இது ஆண்டுக்கு 30 லட்சம் டிவி.க்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக விளங்குகிறது.

SCROLL FOR NEXT