வணிகம்

வாட்ஸ் அப் ‘பே’ அனுமதி விவகாரம்: இந்தியர்களின் தகவல்கள் எங்கே சேமிக்கப்படுகின்றன? - ஆய்வு செய்ய என்பிசிஐ-க்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

செய்திப்பிரிவு

ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுத்தும் வாட்ஸ் அப் செயலியில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு வாட்ஸ் அப் பே என்ற பெயரில் தனி சேவையை தொடங்க உள்ளது. இதற்கான அனுமதியைக்கோரி ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில் நவம்பர் 1-ம் தேதி தேசிய பேமென்ட் கார்ப்பரேஷனுக்கு (என்பிசிஐ) ரிசர்வ் வங்கி அனுப்பிய கடிதத்தில், பேமென்ட் சேவை தொடங்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல் தொகுப்புகளை இந்தியாவில்தான் வாட்ஸ் அப் நிறுவனம் பாதுகாத்து வைக்கிறதா என ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியர்கள் பற்றிய தகவல் தொகுப்புகளை இந்தியாவில்தான் சேமிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

இந்த விதிமுறையை பூர்த்தி செய்யத் தவறும் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது. இதனால் வாட்ஸ் அப் ‘பே’ சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் பற்றிய தகவல் தொகுப்புகள் எங்கே சேமித்து வைக்கப்படுகின்றன என்ற விவரத்தை ஆராயுமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியர்களின் நிதி சார்ந்த தகவல் தொகுப்புகள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டில் சேமிக்கப்படக் கூடாது என்றும் ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது. வாட்ஸ் அப் ‘பே’ சேவை நாடு முழுவதும் தொடங்கப்படுவதற்கு முன்பு தகவல் தொகுப்புகள் உள்நாட்டில் சேமிக்கப்பட்டுள்ளதா என்று ஆராயுமாறு என்பிசிஐ-யை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப் ‘பே’ தொடர்பாக ஆர்பிஐ அனுப்பிய கடிதத்துக்கு செப்டம்பர் 12 மற்றும் அக்டோபர் 24-ம் தேதி என்பிசிஐ பதில் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அதில் வாடிக்கையாளர்களின் இணையதள விவரங்கள் உள்ளிட்டவை அனைத்தும் இந்தியாவுக்கு வெளியே எங்கும் பதிவுசெய்யப்படவில்லை என கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் வாட்ஸ் அப் ‘பே’ சேவை தொடங்குவதில் எவ்வித சிரமமும் இருக்காது என்று தோன்றுகிறது.

SCROLL FOR NEXT