சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமான காசா கிராண்டே, புதிதாக சேமிப்புக் கிடங்கு மற்றும் தொழில்பூங்காவை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இது டிஸ்ட்ரிபார்க் என்ற பெயரில் செயல்படும்.
சென்னையை அடுத்துள்ள பெரும்புதூர் அருகில், மப்பேடு கிராமத்தில் இந்த தொழில் பூங்கா அமைகிறது. 20 லட்சம் சதுர அடி அளவில் இந்த தொழில்பூங்கா அமைய உள்ளது. முதல் கட்டமாக 5 லட்சம் சதுர அடியில் அமைய உள்ள இந்த தொழில் பூங்காவில், 2 லட்சம் சதுர அடிகளுக்கான கட்டுமான வேலைகள் முடிவடைந்துவிட்டன என்றும், அடுத்த மாதம் 10 ஆம் தேதி இந்த தொழில் பூங்கா திறக்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான அருண்குமார் கூறினார்.
இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ரியல் எஸ்டேட் துறையிலிருந்து, அடுத்த கட்டமாக தொழிலை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையாக இந்த தொழில் பூங்காவை அமைக்க உள்ளோம் என்று குறிப்பிட்டார். தொடக்க முதலீடு ரூ 70 கோடி முதல் ரூ 80 கோடி என்றவர், அடுத்த அடுத்த கட்டங்களில் 40 கோடி வரை கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
தொழில் பூங்காவுடன், சேமிப்புக் கிடங்கு வசதியும் இந்த டிஸ்ட்ரிபார்க் கொண்டிருக்கும். இந்த தொழில் பூங்காவில் ஆட்டோமொபைல், சில்லரை வர்த்தகம், இ-காமர்ஸ் மற்றும் மருத்துவ துறை சார்ந்த நிறுவனங்களுக்கு தேவையான சேமிப்புக் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் கொண்டதாக இருக்கும் என்றார்.
தற்போது டெய்ம்லர் நிறுவனத்துக்கு உதிரிபாகங்களை தயாரிக்கும் கேஎல்டி டியூப்லர் நிறுவனம் இந்த தொழில்பூங்காவில் செயல்படத் தொடங்கிவிட்டது. அடுத்ததாக இரண்டு நிறுவனங்கள் வர உள்ளன என்றார்.
வளர்ந்துவரும் ஆட்டோமொபைல் சந்தை மற்றும் இண்டஸ்ட்ரியல் காரிடர் இவற்றின் தேவைக்கேற்ப டிஸ்ட்ரிபார்க் அமையும் பகுதியை தேர்வு செய்தோம். இங்கு தொழில் அமைக்கும் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப கட்டமைப்பு முதல், பணியாளர்கள் வரை ஏற்பாடு செய்து கொடுக்கும். மேலும் இந்த தொழில் பூங்காவுக்கு என்றே தனியாக மின் உற்பத்தி நிலையமும் அமைக்க உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய டிஸ்ட்ரிபார்க் நிர்வாக இயக்குநர் மோதிராம் பிரசாத், உடனடியாக தொழில் தொடங்க அனைத்து வசதிகளும் உள்ளது என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் 5 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணிகள் முழுமையடையும் என்றார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய இலக்கு வைத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.