உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அரசுக்குச் செலுத்த வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டால் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் சந்தேகத்திற்கிடமாகிவிடும் என்று பிரிட்டிஷ் தொலைபேசி சேவை நிறுவனம் வோடஃபோன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வோடஃபோன் தலைமைச் செயலதிகாரி நிக் ரீட் கூறும்போது, “ஆதரவற்ற கட்டுப்பாட்டினால் நிதிநிலை ரீதியாக எங்களுக்கு பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. மேலதிக வரிகள் இதோடு மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சேர்ந்து கொண்டுள்ளது” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “மிகவும் சவாலான சூழல், நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது, அரசு ஆதரவு இல்லையெனில் இந்தியாவில் எங்களது இருப்பு ஐயத்திற்கிடமாகி விடும். அரசும் ஏகபோகத்தை விரும்பவில்லை என்றே கூறுகிறது” என்றார்.
இந்திய வர்த்தகத்தில் வோடஃபோன் நிறுவனத்தின் ஆபரேட்டிங் நஷ்டம் ஏப்ரல் செப்டம்பரில் 692 மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 133 மில்லியன் யூரோக்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 30ம் தேதி முடிந்த 6 மாதங்களில் 1.9 பில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறது வோடபோன்.
டெலிகாம் உரிமக் கட்டணம் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாடு, அபராதம் மற்றும் தாமதமான கட்டணம் செலுத்துதலுக்கான வட்டி ஆகியவற்றைச் சேர்த்தால் மொத்தம் 1.4 லட்சம் கோடி அரசுக்கு இந்தத் துறையிடமிருந்து வர வேண்டியுள்ளது. இதில் வோடபோன் - ஐடியா இணைவினை நிறுவனம் மட்டும் மூன்றில் ஒரு பங்குத் தொகையைச் செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில் அரசு கைகொடுக்காவிட்டால் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியே என்கிறது வோடபோன்.