அன்புள்ள கீதா,
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரத்திலிருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் ஹெரால்ட் சன்” (Herald Sun). இன்று அதன் வணிகப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தி:
ஆஸ்திரேலியாவை அலங்கரிக்கும் இந்தியத் தரை விரிப்புகள்! தமிழ்ப் பெண்ணின் சாதனை என என்னைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ளனர்.
என் போட்டோ. ஆமாம் கீதா, சத்தியமங்கலம் என்கிற சின்ன ஊரின் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பண்ணாரி அம்மன் பொறி யியல் கல்லூரியில் படித்து, ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஈரோட்டில் ஜமக்காளங்களும், தரை விரிப்புகளும் தயாரிக்கத் தொடங்கிய நான், உன் தோழி தேன்மொழி, இன்று ஆஸ்திரேலிய நாளிதழில் பேசுகிற அளவுக்கும் பிரபலம் ஆகிவிட்டேன்.
சில மாதங்களுக்கு முன்பு, ராபர்ட் என்னும் ஆஸ்திரேலிய பிசினஸ்மேன் ஈரோடு வந்திருந்தார். நான் தயாரிக்கும் தரை விரிப்புகளில் ஈடுபாடு காட்டினார். அவற்றைத் தங்களது நாட்டில் விற்பனை செய்வதற்கு ஏஜென்சி தருமாறு கேட்டார். அவரையும், இன்னும் சில முக்கிய வியாபாரிகளையும் சந்திக்கத்தான் நான் ஆஸ்திரேலியா வந்திருக்கிறேன். மூன்று வாரச் சுற்றுப் பயணம். அற்புதமான அனுபவம். எனக்குப் பிடித்த ஆஸ்திரேலியா பற்றிய சில மனப்பதிவுகளை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நம் நாட்டிலிருந்து ஆஸ்திரேலி யாவுக்கு ரூ.17,000 கோடிக்கு ஏற்றுமதி செய்கிறோம். உலோகம், இயந்திரம், மோட்டார் பம்புகள், ஜவுளிப் பொருட்கள், மருந்துகள், போக்குவரத்து வாகனங்கள் ஆகியவை நமது ஏற்றுமதியில் முக்கியமானவை. அவர்களிடமிருந்து இறக்குமதி செய்யும் மதிப்பு ரூ.62,768 கோடி. நாம் வாங்குவதில் முக்கியமானவை உலோகத் தாதுப் பொருட்கள், காரீயம், அலுமினியம், காய்கறிகள், பழங்கள், கம்பளி நூல். ஆனால், நமது ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஆஸ்திரேலியாவுடனான பங்கு ஒரு சதவிகிதம்தான். ஆகவே, இவை இரண்டையும் கணிசமாக அதி கரிக்கும் வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன. என்னைப் போன்ற தொழில் முனைவர்கள் இந்த வாய்ப்புக் கதவுகளைத்தான் தட்டிக் கொண் டிருக்கிறோம்.
இந்த முயற்சியில் ஜெயிக்க, ஆஸ்திரேலியா, அதன் குடிமக்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள் ஆகிய வற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும்.
பூகோள அமைப்பு
இந்திய பெருங்கடலுக்கும், தென் பசிபிக் பெருங்கடலுக்கும் நடுவே இருக்கும் தனிக் கண்டம். பப்புவா நியூ கினி (Papua New Guinea), இந்தோனேஷியா, நியூசிலாந்து போன்றவை அண்டைய நாடுகள்.
நிலப் பரப்பு 77,41,220 சதுரக் கிலோமீட்டர்கள். அதாவது, நம் நாட்டைவிட இரண்டரை மடங்கு பெரியது. பரப்பளவின் அடிப்படையில், ஆஸ்தி ரேலியா உலகத்தின் மிகச் சிறிய கண்டம்; ஆனால், ஒன்பதாவது பெரிய நாடு. தலைநகர் கான்பெரா (Canberra). பிற முக்கிய நகரங்கள் அடிலாய்ட், பிரிஸ்பெர்ன் பெர்த், சிட்னி, மெல்போர்ன்.
ஆஸ்திரேலியாவுக்கு இயற்கை தாதுச் செல்வங்களை அள்ளித் தந்திருக்கிறது. உலகத்தின் 29 சதவீத கரி சப்ளையர் இவர்கள்தாம். வைரக்கற்கள், தங்கம், பாக்சைட், செம்பு, ஈயம், வெள்ளி, யுரேனியம், பெட்ரோலியம், ஆகிய வளங்கள் ஏராளம் கொண்ட நாடு.
மக்கள் தொகை
2 கோடி 38 லட்சம். ஆஸ்திரேலியர்கள் 25 சதவீதம்; பிரிட்டிஷர் 25 சதவீதம்; பழங்குடி மக்கள் சுமார் ஏழு லட்சம் பேர் இன்னும் இருக்கிறார்கள். இந்தியர்கள் ஒரு சதவீதத்துக்கும் சற்றே அதிகம். ஒவ்வொரு வருடமும் சுமார் 2 லட்சம் பேர் ஆஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்து வருவதாகச் சொல்கிறார்கள். இவர்களில் பத்து சதவீதம் இந்தியர்கள் என்று கேள்விப்பட்டேன்.
77 சதவீத மக்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். சீனம், இத்தாலியன், கிரேக்கம் அரபிக், பழங்குடி மக்களின் 15 பேச்சு மொழிகள் ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன.
மதவாரியாக, 30 சதவீதத்தினர் ப்ராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள்; 25 சதவீதம் கத்தோலிக்கர்கள்; 2 சதவீதம் முஸ்லீம்கள். இன்னொரு 2 சதவீதம் புத்த மதத்தினர்; இந்துக்கள் 1 சதவீதம் வசிக்கின்றனர்.
சுருக்க வரலாறு
70,000 ஆண்டுகளுக்கு முன்னால், ஆசியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து மக்கள் வந்து குடியேறியிருக்கவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். 1600- களில் டச்சுக்காரர்களும், 1800 களில் பிரிட்டிஷாரும் வரத் தொடங்கினார்கள். 1788 இல், இங்கிலாந்து அரசாங்கம் 1,60,000 ஆண், பெண் கைதிகளை ஆஸ்திரேலியாவில் குடியேற்றம் செய்தார்கள். நாட்டைத் தங்கள் பேரரசின் காலனியாக்கிக்கொண்டார்கள். தங்கச் சுரங்கத் தொழில், ஆடுகள் வளர்த்துக் கம்பளி நூல் தயாரிப்பு ஆகிய தொழில்களில் பணம் கொட்டியது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து குடியேறத் தொடங்கினார்கள். 1901- இல் சுதந்திரம் பெற்ற ஆஸ்திரேலியா குடியரசாக காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கிறது.
ஆட்சி முறை
இங்கிலாந்து மகாராணியைத் தலைவியாகக் கொண்ட மக்களாட்சி. பிரதமர் ஆட்சி நடத்துகிறார். மேல்சபை (செனட்), கீழ்சபை (ஹெளஸ் ஆஃப் ரெப்ரசென்ட்டேடிவ்ஸ்) என இரண்டு மக்கள் மன்றங்கள் உண்டு.
பொருளாதாரம்
உலகின் பணக்கார நாடுகளில் ஆஸ்திரேலியா ஒன்று. கடந்த 20 ஆண்டுகளாக மாபெரும் வளர்ச்சி. சுரங்கத் தயாரிப்புகள், விவசாயப் பொருட்கள் ஆகியவற்றுக்கு இந்தியா விலும், சீனாவிலும் ஏகப்பட்ட கிராக்கி.
நாணயம்
ஆஸ்திரேலிய டாலர். இன்றைய மதிப்பின்படி, சுமார் 47 ரூபாய்.
பயணம்
ஆஸ்திரேலியாவின் நான்கு பருவ காலங்கள் இவைதாம்;
டிசம்பர் முதல் பிப்ரவரி வரை கோடை காலம்
மார்ச் முதல் மே வரை இலையுதிர் காலம்
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை குளிர் காலம்
செப்டம்பர் முதல் நவம்பர் வரை வசந்த காலம்
செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்கள் சுற்றுலாவுக்கு பொருத்தமானவை. கோடையும், குளிர்காலமும் கடுமையானவை அல்ல. மழையும் சகஜ வாழ்க்கையைப் பாதிப்பதில்லை. எனவே, எப்போது வேண்டுமானாலும், பிசினஸ் பயணம் போகலாம். ஆஸ்திரேலியா பரந்து விரிந்த நாடாக இருப்பதால், பகுதிக்குப் பகுதி பருவ நிலைகளில் மாற்றம் இருக்கும். ஆகவே, எந்த ஊர்களுக்குப் போகிறோமோ அந்த ஊர்களின் சீதோஷ்ண நிலைமைகளை முன்பே தெரிந்து கொள்ள வேண்டும்.
பிசினஸ் டிப்ஸ்
ஆஸ்திரேலிய பிசினஸ்மேன்களைச் சந்திப்பது சுலபம். எளிதில் அப்பாயிண்ட்மெண்ட் தருவார்கள். குறித்த நேரத்துக்கு போகவேண்டும். தாமதங்களை வெறுப்பார்கள். பேச்சும், பிரசன்டேஷன்களும் ரத்தினச் சுருக்கமாக இருக்கவேண்டும். பிசினஸில் மட்டுமல்ல, தனிப்பட்ட பேச்சுக்களிலும் நீட்டி முழக்குவது அவர்களுக்குப் பிடிக்காது.
’சார்’ என்று அழைப்பதைவிட, ‘மேட்” (Mate) என்று விளிப்பார்கள். நல்லவர்கள், நட்பானவர்கள்.ஆனால், சீண்டுவது அவர்கள் பழக்கம். முக மலர்ச்சியோடு இந்தச் சீண்டல்களை ஏற்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
உடலைத் தொட்டுப் பேசுவது அநாகரிகம். விரலை உயர்த்திப் பேசுவதும் கூடாது. பல வருடங்களுக்கு முன்னால், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆஸ்திரேலியா போயிருந்தார். V for Victory என்னும் உடல்மொழியைக் காட்டினார். அவர் புறங்கை பார்வையாளர்களைப் பார்த்தபடி இருந்தது.
மறுநாள். ஜார்ஜ் புஷ் ஆஸ்திரேலி யர்களை அவமானப்படுத்திவிட்டார் என்று சரமாரியாகக் குற்றச்சாட்டுக்கள். ஏன் தெரியுமா. இந்தச் சைகையைக் காட்டும்போது, உள்ளங்கை பார்வை யாளர்களை நோக்கி இருக்கவேண்டும். கையின் பின்பக்கம் அவர்களைப் பார்த்தபடி இருந்தால், கேலி செய்வதாக அர்த்தம். ஆகவே, ஆஸ்திரேலியா போகும் முன், அவர்கள் உடல்மொழி பற்றி விவரமாகத் தெர்ந்துகொள்ள வேண்டும். இன்னும் மூன்று நாட்களில் ஊர் திரும்பியதும் உன்னை வந்து சந்திக்கிறேன். அப்போது சொல்வதற்கு இன்னும் பல சுவாரஸ்யமான கதைகள் வைத்துள்ளேன்.
அன்புடன்
உன் உயிர்த் தோழி, தேன்மொழி
பின் குறிப்பு
ஆஸ்திரேலியா என்றதும் நம் நினைவுக்கு வரும் இரண்டு விஷயங்கள் கிரிக்கெட், கங்காரு. மேட்ச் பார்க்க நேரம் இருக்கவில்லை. ஆனால், காலையில் வாக்கிங் போகும்போது, ஏராளமான சின்னப் பசங்க கிரிக்கெட் பிராக்டீஸ் செய்வதைப் பார்த்து ரசித்தேன். வயிற்றில் குட்டிகளைத் தூக்கிக்கொண்டு குதித்துக் குதித்து ஓடும் கங்காருக்களைக் காணும் காட்சி பரவச அனுபவம். ஆஸ்திரேலிய நாட்டின் சின்னமும் அதுதான். நிறைய கங்காரு பொம்மைகள் வாங்கியிருக்கிறேன். அதில் பெரிய பொம்மை ஒன்று உன் மகன் கண்ணன் விளையாடுவதற்காக ஸ்பெசலாக வாங்கி வைத்துள்ளேன்.
slvmoorthy@gmail.com
(தொடரும்)