வணிகம்

தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகின் முதல் 20 பணக்காரர்கள் பட்டியலில் அஸிம் பிரேம்ஜி, ஷிவ் நாடார்

செய்திப்பிரிவு

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களில் உலகின் பணக் காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த விப்ரோ நிறுவனத் தலைவர் அஸிம் பிரேம்ஜி, ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் இருவரும் முதல் 20 பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளனர். போர்ப்ஸ் வெளி யிட்ட இந்த பட்டியலில் முதலிடத் தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளார்.

போர்ப்ஸ் வெளியிட்ட டெக்னாலஜி துறையில் 100 பணக்காரர்கள் பட்டியலில் பிரேம்ஜி 13 வது இடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து ஷிவ் நாடார் 14 வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரமேஷ் வாத்வானி மற்றும் பாரத் தேசாய் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

அஸிம் பிரேம்ஜியின் மொத்த சொத்து மதிப்பு 1,740 கோடி டாலர்கள். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்றும் போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. இவருக்கு அடுத்து இருக்கும் ஷிவ் நாடாருக் குமான சொத்து மதிப்பு சுமார் 400 கோடி டாலர்கள் இடைவெளி உள்ளது.

ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஷிவ் நாடார் சொத்து மதிப்பு 1,440 கோடி டாலராக உள்ளது. சிம்பொனி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரான வாத்வானி இந்தப் பட்டியலில் 73 வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 280 கோடி டாலர். இவரது 20 நிறுவனங்களில் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் சாப்ட்வேர் துறையிலிருந்து ஆண்டுக்கு 300 கோடி வருமானம் ஈட்டுகிறார் என போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வாத்வானி பவுண்டேஷன் 100 கோடி டாலர் மதிப்பில் இந்தியாவில் தொழில்முனைவுக்கான திட்டங் களை அறிவித்தது. ஆனால் இந்த முதலீட்டுக்கான கால வரையறை எதையும் நிறுவனம் அறிவிக்க வில்லை. பாரத் தேசாய் 250 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 82 வது இடத்தில் உள்ளார்.

பட்டியலில் அமெரிக் காவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். 51 பணக் காரர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆசியாவை சேர்ந்தவர்களும் இந்தப் பட்டியலில் அதிக அளவாக 33 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 8 பணக்காரர்களும், சுமார் 200 கோடி டாலர் சொத்து மதிப்பில் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த இரண்டு பேரும், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் கலிபோர்னியாவில் வசிப்பதாகவும் போர்ப்ஸ் குறிப்பிடுகிறது.

முதலிடத்தில் உள்ள பில்கேட் சின் சொத்து மதிப்பு 7960 கோடி டாலர்கள். இரண்டாவது இடத்தில் ஆரக்கிள் நிறுவன தலைவர் லாரி எலீசன் 5000 கோடி டாலர் சொத்து மதிப்போடு உள்ளார். கடந்த ஆண்டு எல்சன் 3820 கோடி டாலர் சொத்து மதிப்பில் இருந்தார்.

மூன்றாவது இடத்தில் அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிஜோஸ் உள்ளார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் நான்காவது இடத்திலும், கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ் 5 வது இடத்திலும் உள்ளனர். அலிபாபா தலைவர் ஜாக்மா 7 வது இடத்திலும், கூகுள் நிறுவன எரிக் ஸ்மித் 20 வது இடத்திலும், உபெர் நிறுவன தலைவர் டிராவிஸ் கலாநைக் 35 வது இடத்திலும், ஸ்கொயர் நிறுவனத் தலைவர் ஜாக் டோர்ஸி 92 வதாகவும் உள்ளனர்.

இந்த 100 பணக்காரர்களின் மொத்த மொத்த சொத்து மதிப்பு 84290 கோடி டாலர்கள். இந்த பட்டியலில் 7 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT