வணிகம்

பணவீக்கம் குறைந்தால் மட்டுமே கடனுக்கான வட்டி குறைக்கப்படும்: ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அறிவிப்பு

பிடிஐ

பணவீக்கம் 6 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் நிலை தொடர்ந்தால் மட்டுமே கடனுக்கான வட்டிக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் நிதிக் கொள்கையை நேற்று முன்தினம் வெளியிட்ட பிறகு இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த ராஜன், பணவீக்க விகிதம் 6 சதவீதத்துக்கும் கீழாக குறையும்போதுதான் வட்டிக் குறைப்பு நடவடிக்கையை எடுக்க முடியும் என்றார்.

ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் சில்லரை பணவீக்கம் 6.1 சதவீத அளவுக்குக் குறையும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

பால் விலை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வது பணவீக்கம் அதிகரிப்பதால்தான் என்று மக்கள் நினைக்கின்றனர். இது மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்றார்.

சில்லரை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.4 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. இது மே மாதத்தில் 5.01 சதவீதமாக இருந்தது. இருப்பினும் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) விவரத்தின் அடிப்படையில் நிதிக் கொள்கையை வகுப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி (பெடரல் ரிசர்வ்) வட்டி விகிதத்தை உயர்த்தினால் அதன் பாதிப்பு இந்தியாவில் எதிரொலிக்குமா என்று கேட்டதற்கு, ஆரம்பத்தில் அதன் பாதிப்பு பங்குச் சந்தையில் தெரியும் என்றார். ஆனாலும் இந்தியாவில் பங்குச் சந்தை முதலீடு லாபகரமானதாக இருக்கும் என்பதை அறிந்து முதலீட்டாளர்கள் மீண்டும் இங்கு வருவர் என்று அவர் சுட்டிக் காட்டினார். ஸ்திரமான முதலீட்டு வாய்ப்பு இங்குள்ளது என்பதை உணர்ந்து அவர்கள் திரும்புவர் என்றார்.

இந்தியாவின் வளர்ச்சி ஸ்திரமாக, சீராக உள்ளது என்று குறிப்பிட்டார்.

நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) அமைப்பது குறித்து கேட்டதற்கு, பொதுக்கடன் நிர்வாக நிறுவனம் (பிடிஎம்ஏ) அமைப்பதற்கு அரசியல் அமைப்பு ரீதியில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அதைச் செயல்படுத்துவதற்கு ஆண்டுகள் பல ஆகும் என்று குறிப்பிட்டார்.

நிதிக் கொள்கையை வெளி யிட்டுப் பேசுகையில், தனியொரு வனாக நிதிக் கொள்கையை வகுப்பதை விட குழு தீர்மானிப்பது சிறப்பாக இருக்கும் என்று ராஜன் குறிப்பிட்டிருந்தார்.

பட்ஜெட்டில் பிடிஎம்ஏ அமைப்பது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சர் வெளியிட்டிருந்தார். இதற்கு ரிசர்வ் வங்கி கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இது செயல்படுத்தப்படவில்லை.

SCROLL FOR NEXT