வாஷிங்டன்
பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வேலை நேரம் தொடர்பாக வெவ்வேறு கொள்கைகளை கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் ஊழியர்கள், வேலை சார்ந்து குறைந்த நேரமும், வாழ்க்கை சார்ந்து மீதமுள்ள நேரத்தையும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. வாரம் 4 நாட்கள் மட்டும் ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும்; மீதமுள்ள மூன்றுநாட்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கானது என்ற புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது.
ஆரம்பகட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் உள்ள அதன் கிளையில் இது தொடர்பாக சோதனை ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, அங்குள்ள 2,300 ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு நாட்களுடன் சேர்த்து வெள்ளிக்கிழமையும் விடுப்பு அளித்தது. அதன் பிறகு அவர்களது பணித் திறனை சோதித்தபோது, அவை முன்பு இருந்ததைவிட மேம்பட்டு இருப்பதுதெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஜப்பான் பிரிவின் தலைவர் மற்றும் சிஇஓ டக்குயா கிரானோ கூறியபோது, ‘அடிப்படையாக ஊழியர்கள் தங்கள் வாழ்வை முழுமையாக வாழ வேண்டும். அவ்வாறு அவர்கள் தங்கள் வாழ்க்கையில் திருப்திகொள்கையில், அது வேலைச் சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தார்.