வணிகம்

யெஸ் வங்கியில் ரூ.8,500 கோடி முதலீடு: வெளிநாட்டு நிறுவனம் விருப்பம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

யெஸ் வங்கியில் ரூ.8,500 கோடி (1.2 பில்லியன் டாலர்) அளவில் முதலீடு மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனம் ஒன்று விருப்பம் தெரிவித்துள்ளது.

பல்வேறு அந்நிய முதலீட்டாளர்கள் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து வருவதாக கடந்த மாதம் யெஸ் வங்கி தகவல் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ரூ.8,500 கோடி அளவில் அந்நிய நிறுவனம் ஒன்று முதலீடு மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து இருப்பதை யெஸ் வங்கி தற்போது உறுதிபடுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அந்நிய மற்றும் உள்நாட்டு முதலீட்டார்களுடன் கலந்தாலோசிக்க உள்ளதாக யெஸ் வங்கி கூறியுள்ளது. ஹாங்காங்கை சேர்ந்த எஸ்பிஜிபி ஹோல்டிங் என்ற நிறுவனம் இந்த முதலீடை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவருகின்றன.

புதிய முதலீட்டாளர்கள் வசம்

தற்போது யெஸ் வங்கி 2.55 பில்லியன் பங்குகளை கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரூ.8,500 கோடி அளவில் புதிய முதலீடு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதன் பங்கு அளவு 4.02 பில்லியனாக உயரும். அதன் பிறகு யெஸ் வங்கியின் 37 சதவீத பங்குகள் புதிய முதலீட்டாளர் வசம் இருக்கும் என்று தெரிகிறது.

கணிசமாக குறையலாம்

இந்த முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்பட்சத்தில் யெஸ் வங்கியின் முதன்மை பங்குதாரர்களான ரானா கபூர் மற்றும் அசோக் கபூரின் மனைவி மது கபூர் ஆகியோரின் பங்கு சதவீதம் கணிசமான அளவில் குறையும் என்று தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் நேற்றைய வர்த்தக முடிவில் யெஸ் வங்கியின் பங்கு மதிப்பு 6.11 சதவீதம் குறைந்து ரூ.66.10-க்கு வர்த்தகமானது.

SCROLL FOR NEXT