கெய்ர்ன் இந்தியா நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு வேதாந்தா வுடன் இணைக்கப்பட்டது. 77,752 கோடி ரூபாய் கடனில் இருக்கும் வேதாந்தாவின் கடனை அடைப்பதற்காக கெய்ர்ன் இந்தியா நிறுவனம் இணைக்கப்படவில்லை என்று வேதாந்தா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாம் அல்பனேஸ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது.
குழும நிறுவனங்களை ஒன்றாக இணைத்து எளிமையாக வேண்டும் என்ற உத்தியின் அடிப்படையில் தான் நிறுவனங்கள் இணைக்கப் பட்டன. மேலும் ரிஸ்கினை குறைத்து, நிலையான வருமானம் இருக்க வேண்டும் என்பதற்காக இணைக்கப்பட்டது. எங்களுடைய அனைத்து பங்குதாரர்களின் முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
எங்களுடைய பங்கு மற்றும் கடன் சார்ந்த முதலீட்டாளர் கள் எங்களது நடவடிக் கையைத் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. பணத்தின் தேவைக்காக கெய்ர்ன் இந்தியா இணைக்கப்படவில்லை.
கெய்ர்ன் இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் இந்த இணைப்புக்கு ஆதரவு தெரி வித்திருக்கிறார்கள். தவிர கெய்ர்ன் இந்தியாவின் முக்கியமான பெரிய முதலீட்டாளர்களான எல்ஐசி மற்றும் கெய்ர்ன் எனர்ஜி ஆகிய நிறுவனங்களிடம் இந்த இணைப்பு பற்றி பேசி இருக்கிறோம். பங்குதாரர்களின் கலந்தாய்வுக்கு இன்னும் சில மாத காலங்கள் இருப்பதால் நிறுவன முதலீட்டாளர்கள் இன்னும் இது குறித்த தெளிவான முடிவை எடுக்கவில்லை என்றார்.
கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தில் வேதாந்தா 60 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் கெய்ர்ன் எனர்ஜி மற்றும் எல்ஐசி ஆகிய நிறுவனங்கள் 19 சதவீத பங்கினை வைத்திருக்கின்றன. சுமார் ரூ. 17,000 கோடி அளவுக்கு கெய்ர்ன் இந்தியா வசம் ரொக்கம் இருக்கிறது.