பெங்களூரு
இந்திய அளவில் முக்கிய 7 நகரங்களில் இந்த ஆண்டின் ஜனவரி முதல்செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.1.54 லட்சம் கோடி மதிப்பிலான வீடுகள் விற்பனையாகியுள்ளன. சென்ற ஆண்டை விட இது 16 சதவீதம் அதிகம் ஆகும்.
ரியல் எஸ்டேட் துறை ஆலோசனை நிறுவனமான அனராக் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில்ரூ.1.33 லட்சம் கோடி மதிப்பிலான,1.78 லட்சம் வீடுகள் விற்பனையாகிஉள்ள நிலையில், இந்த ஆண்டில்ரூ.1.54 லட்சம் கோடி மதிப்பிலான 2.02 லட்சம் வீடுகள் விற்பனையாகியுள்ளன. வீடுகள் விற்பனையில் மும்பைமுதல் இடத்திலும், அதைத் தொடர்ந்து பெங்களூரு இரண்டாவது இடத்திலும் உள்ளன. மும்பையில் இந்த ஆண்டு மட்டும் ரூ.62,970கோடி மதிப்பிலான வீடுகளும், பெங்களூரில் ரூ.28,160 கோடி மதிப்பிலான வீடுகளும் விற்பனையாகி உள்ளன.
பிற நகரங்களைக் காட்டிலும் சென்னையில் வீடுகள் விற்பனை குறைவாகவே பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் ரூ.5,580 கோடிமதிப்பிலான வீடுகளே சென்னையில் விற்பனையாகி உள்ளன. அதேசமயம் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில், வீடு விற்பனை சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவில் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் ரூ.50,535கோடி மதிப்பிலான வீடுகள் விற்பனையாகி உள்ள நிலையில் இந்தஆண்டு ரூ.42,040 கோடி மதிப்பிலான வீடுகளே விற்பனையாகி உள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டில் ரியஸ் எஸ்டேட் துறையில் அந்நியமுதலீடு உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் ரூ.26,600 கோடி(3.8 பில்லியன் டாலர்) அளவில் அந்நிய முதலீடுகள் ரியல்எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற ஆண்டுஇதே காலகட்டத்தில் ரூ.22,400 கோடி (3.2 பில்லியன் டாலர் அளவில்) முதலீடுகள் செய்யப்பட்டன.