உலகளாவிய கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பிஸோஸ், தற்போது அந்த இடத்தை இழந்துள்ளார்.
மூன்றாம் காலாண்டில் அமேசான் நிறுவனத்தின் வருவாய் 26 சதவீதம் சரிந்த நிலையில், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு வியாழன் அன்று 7 சதவீதம் அளவில் சரிந்தது. ஏறக்குறைய சந்தை மதிப்பில் 7 பில்லியன் டாலர் ஒரே நாளில் குறைந்தது. அதைத் தொடர்ந்து ஜெஃப் பிஸோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
மீண்டும் பில்கேட்ஸ்
இந்நிலையில் பில்கேட்ஸை விட அதிக சொத்து மதிப்பு கொண்டிருந்த ஜெஃப் பிஸோஸ், தற்போது பில்கேட்ஸிடம் முதலிடத்தைப் பறிகொடுத்துள்ளார். கடந்த 24 வருடங்களாக பில்கேட்ஸ் உலகளாவிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் 2018-ம் ஆண்டு, ஜெஃப் பிஸோஸ் 160 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டு முதல் இடத்தைப் பிடித்தார்.
தற்போது பிஸோஸின் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் டாலராக குறைந்துள்ள நிலையில், பில்கேட்ஸ் 105.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டு மீண்டும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.