வணிகம்

8% முதல் 10% வளர்ச்சி சாத்தியமே: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை

செய்திப்பிரிவு

மறைமுக வரி வருவாய் உயர்ந்திருப்பது, சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து வருவது உள்ளிட்ட காரணங்களால் எட்டு சதவீத வளர்ச்சி என்பதை தாண்டி 8 முதல் 10 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல் காலாண்டின் மறைமுக வரி வசூல் பற்றிய தகவல் சமீபத்தில் வெளியானது. கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது மறைமுக வரிவசூல் 37 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடத்தின் வரி வசூல் நிலைமையை விட இப்போ தைய சூழ்நிலை நன்றாக மேம்பட் டிருப்பதாக நபார்ட் வங்கியின் 34-வது நிறுவனர் நாள் விழாவில் அருண் ஜேட்லி கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது.

கடந்த வருடம் 7.3 சதவீத வளர்ச்சியை அடைந்தோம். நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். முக்கியமான மாற்றமாக சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறோம்.

கட்டுமானத்துறைக்கான செலவுகளை அதிகரிக்க திட்டமிட் டிருக்கிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் 8 சதவீத வளர்ச்சி என்னும் நிலையை தாண்டி 8 முதல் 10 சதவீத வளர்ச்சியை நம்மால் அடைய முடியும்.

சேவைத் துறையில் இரட்டை இலக்க வளர்ச்சியை நாம் அடைந்து வருகிறோம். அதைவிட அதிக வளர்ச்சியை உற்பத்தி துறையில் எட்டி வருகிறோம். ஆனால் விவசாய துறையில் சராசரியாக 4 சதவீத வளர்ச்சியை கூட நம்மால் அடையமுடியவில்லை. இவ்வளவு பெரிய நாட்டில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைச் சூழல் கடுமையாகவே இருக்கிறது.

அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் அதிகம். அதிக உற்பத்தி விலை, குறைவான பாசன வசதி, கடன் தொல்லை, காப்பீடு இல்லாதது மற்றும் பருவமழை சூழல் என பல பிரச்சினைகளில் அவர்கள் இருக்கிறார்கள். பயிர் காப்பீடு குறித்து டாக்டர் அசோக் குலடி நிதி அமைச்சகத்துக்கு சில பரிந்துரைகளை செய்திருக்கிறார்

கட்டுக்குள் பணவீக்கம்

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் பருவமழை நன்றாக இருப்பதால் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

கடந்த மாதம் வரை பருவமழை சிறப்பாக உள்ளது. வரும் காலத்திலும் மழை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதனால் உற்பத்தி அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது.

இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.

30,000 கோடி கடன்

அடுத்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 30,000 கோடி கடன் கொடுக்க நபார்ட் வங்கி திட்டமிட்டிருப்பதாக நபார்ட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹர்ஷ் குமார் பன்வாலா தெரிவித்தார்.

பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனாவின் (பிஎம்கேஎஸ்ஒய்) கீழ் மத்திய அரசு ரூ.50,000 கோடி விவசாயிகளுக்கு கடன் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது. அதனுடன் கூடுதலாக இந்த தொகை விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும்.

இந்த வருடத்துக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம். இதில் 1,000 கோடி ரூபாய்க்கு ஏற்கெனவே ஒப்புதல் கொடுக்கப் பட்டிருக்கிறது என்று நபார்ட் தலைவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT