வணிகம்

பிஎம்சி வங்கி மோசடி: மற்றொரு வாடிக்கையாளர் தற்கொலை; டெபாசிட் செய்த ஓய்வூதியதாரர்கள் தவிப்பு

செய்திப்பிரிவு

மும்பை
மோசடிக்கு ஆளாகியுள்ள பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சோக சம்பவம் மறைவதற்குள் மற்றொரு வாடிக்கையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடன் வாங்கிய ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளனர்.

பிஎம்சி வங்கி மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமலாக்கப்பிரிவு இதுதொடர்பாக சோதனைகள் நடத்தி வருகிறது.

பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை திருப்பி தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வாடிக்கையாளர்கள் தங்கள் பணம் திரும்பவும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

பிஎம்சி வங்கியில் வைத்துள்ள பணத்தை திருப்பி எடுக்க முடியாமல் தவித்த வாடிக்கையாளர்களில் சஞ்சய் குலாஸ்தியும் (வயது 51) ஒருவர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், அந்த நிறுவனம் நிதி நெருக்கடிக்கு ஆளாகி மூடப்பட்டதால் வேலையிழந்தார்.

அவரது மகனும் சிறப்பு குழந்தை. எனவே அவரது சிகிச்சைக்காக அதிகமான செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. ஜெட் ஏர்வேஸில் வேலையிழந்த சஞ்சய் தன்னிடம் இருந்த பணம் 90 லட்சம் ரூபாயை பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்து இருந்தார்.

இதனால் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தநிலையில் அந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ள மேலும் ஒரு வாடிக்கையாளர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவேதிதா பிஜிலானி (வயது 39) என்ற மருத்துவர் பிஎம்சி வங்கியில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். அவர் நேற்று முன்தினம் இரவு அளவுக்கதிகமான தூக்க மாத்திரையை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். தனது தற்கொலைக்கு காரணம் குறித்து அவர் கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை. எனினும் வங்கியில் வைத்துள்ள பணம் உடனடியாக கிடைக்காத நிலையில் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

எனினும் இதனை மும்பை போலீஸார் மறுத்துள்ளனர். பிஜிலானி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு குணமாகாத நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்ற அவர் அண்மையில் மும்பை திரும்பியதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி, பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள் பிஎம்சி வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். பலர் 10 லட்சம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை பிஎம்சி வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். ஆனால் தற்போது வங்கி மோசடியில் சிக்கி நிதிநிலைமை மோசமாகியுள்ளதால் வாடிக்கையாளர்கள் 40 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இதனால் அவசர செலவுக்கு கூட பணம் எடுக்க முடியாத நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT