வணிகம்

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை: மேலும் ரூ.80 அதிகரித்தது

செய்திப்பிரிவு

சென்னை

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வரும் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.29,264 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். இதன் காரணமாக தங்கத்தின் விலை அண்மைக் காலமாக உயர்ந்தது.

இதனால் உள்ளூர் ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்கிடையே கடந்த செப்.4-ம் தேதி வரலாற்றில் புதிய உச்சமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த நிலையில், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தைச் சந்தித்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 80 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. அதாவது கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 3,658 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதே போல 24 கேரட் சுத்தத் தங்கம் ரூ.30 ஆயிரத்து 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் தொடர்ந்து ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளியின் மதிப்பில் கடந்த 4 நாட்களாக எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி எவ்வித மாற்றமும் இல்லாமல், அதே விலையில் ரூ.49.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளி, ரூ.49,100-க்கு விற்பனையாகிறது.

SCROLL FOR NEXT