டாடா நிறுவனத்தின் `நானோ’ காரினை பிராண்டிங் செய்த முறை தவறு என்று டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் ஒப்புக்கொண்டிருக்கிறார். கிரேட் லேக்ஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்டின் 11-வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா கலந்துகொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது நானோ கார் பற்றிய கேள்விக்கு மிகவும் மலிவான கார் என்று விளம்பரப்படுத்தியது தவறு. மக்கள் மலிவான காருடன் தங்களை பொருத்திபார்க்க விரும்பவில்லை. மலிவான கார் என்பதற்கு பதிலாக கட்டுபடியாகும் விலையில் உள்ள கார் என்று பிராண்டிங் செய்திருக்க வேண்டும் என்று ரத்தன் டாடா பதில் அளித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது வளர்ந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்வது அவசியம். அவர்களுக்கு ஊக்கம் அளித்து பெரிய நிறுவனங்களாக வளர்க்க வேண்டும்.
எவ்வளவு தொகை முதலீடு செய்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, என்னுடைய தனிப்பட்ட தொகையை முதலீடு செய்திருக்கிறேன் என்று பதில் அளித்தவர் எவ்வளவு தொகை என்பதை குறிப்பிட வில்லை. மேலும் இகாமர்ஸ் தவிர ஹெல்த்கேர் உள்ளிட்ட பிற துறைகளிலும் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.