உருக்கு உற்பத்தியில் அமெரிக் காவை விட அதிகம் உற்பத்தி செய்து மூன்றாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளதாக மத்திய உருக்கு மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
தனது துறையுடன் இணைந்த நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் நேற்று உரையாற்றிய போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார். இதற்கு முன்பு வரை உருக்கு உற்பத்தியில் சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் அதாவது நான்காவது இடத்தில் இந்தியா இருந்தது.
தற்போது கடந்த 5 மாதங்களாக இந்தியாவில் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இதன் மூலம் சர்வதேச உருக்கு உற்பத்தியில் இந்தியா மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவில் உருக்கு உற்பத்தி கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு கச்சா இரும்பு உற்பத்தி 8 சதவீத வளர்ச்சியை எட்டியதாக தோமர் கூறினார். இந்தியாவில் தனிநபர் நுகர்வு மிகக் குறைவாக உள்ளது.
சர்வதேச அளவில் தனி நபர் நுகர்வு 216 கிலோவாக உள்ளது. ஆனால் இந்தியாவில் இது வெறும் 60 கிலோ மட்டுமே என்றார். குறைவான நுகர்வு இருப்பதால் வளர்ச்சிக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2025-ம் ஆண்டில் இந்தியாவின் உருக்கு உற்பத்தி 300 மில்லியன் டன்னை எட்ட வேண்டும் என்பதுதான். இதை எட்டுவதற்கான உத்திகளை அமைச்சகம் வகுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள உருக்கு ஆலைகள் ஏற்கெனவே விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பழைய ஆலைகள் முற்றிலுமாக மாற்றப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில் நுட்பத்தோடு சுற்றுச்சூழல் பாதிப் பில்லாத வகையில் இவை நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பொதுத்துறை நிறுவனமான செயிலு-க்குச் சொந்தமான மிகப் பெரிய உலையை (4,160 கியூபிக் மீட்டர்) திறந்து வைத்தார். மேலும் இத்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளும் ஸ்திரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கச்சாப் பொருள் பிரச்சினை உள்ளது. தரம் குறைந்த கச்சா பொருள், அதிக வெப்பமளிக்கும் நிலக்கரி ஆகியவற்றின் மூலம் உருக்கை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்கின்றன.
உருக்கில் மதிப்பு கூட்டப் பட்ட பொருள் தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம் இறக்கு மதியைக் குறைக்க முடியும் என்றும், இது தொடர்பாக அனைத்து உருக்கு ஆலை களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பெரிய தனியார் ஆலைகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அதிகம் செலவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எஸ்ஆர்டிஎம்ஐ என்ற ஒரு நிறுவனத்துடன் அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம் தொழில்துறைக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கையை எடுக்கும். இதற்கு ரூ. 200 கோடி நிதியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.