வணிகம்

5-வது முறையாக வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் வட்டி மேலும் குறைய வாய்ப்பு

செய்திப்பிரிவு

மும்பை

ரிசர்வ் வங்கி தொடர்ந்து 5வது முறையாக வங்கிகளுக்கான அடிப்படை வட்டி விகிதமான ரெப்போ ரேட் அளவை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும்.

இந்தியப் பொருளாதாரமும், தொழில்துறையும் சுணக்கமாக இருக்கும் சூழலில் அதிக அளவிலான முதலீடுகளை சந்தையில் வரச்செய்து அதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

முதலீடுகள் அதிகரிக்க வேண்டுமெனில் மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும். சுணக்க நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை உயர்த்த ஏற்கெனவே 4 முறை வட்டி விகிதத்தைக் ரிசர்வ் வங்கி குறைத்தது.


இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. மும்பையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் அடிப்படை வட்டி விகிதத்தை 5வது முறையாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது.


இதன் மூலம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் அடிப்படை வட்டியான, ரெப்போ ரேட் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது


வட்டி விகிதம் குறைக்கப்படுவது இது 5வது முறையாகும். தொடர்ந்து 5 முறையும் சேர்த்து மொத்தமாக 1.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. வட்டி குறைக்கப்பட்டுள்ளதால் வீடு, வாகன கடனுக்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து 5வது முறை வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி உட்பட பொதுத் துறை வங்கிகள் பலவும் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் கடன் மற்றும் டெபாசிட்டுகளுக்கான வட்டிகளை நிர்ணயம் செய்துவருகின்றன.

எனினும் சில வங்கிகள் உரிய அளவு வட்டியை குறைக்கவில்லை. இந்த வங்கிகள் வட்டியை குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT