மும்பை:
ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்வாலுக்கு இடையே 2015 ஏப்ரல் மாதம் இண்டிகோ நிறுவனம் தொடர்பான பங்குதாரர்கள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவ்விருவருக்குமிடையே மோதல் அதிகரித்து வருகிற நிலையில் அந்த ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் பாட்டியா மற்றும் அவரது குழுமமான இண்டர்குளோப் எண்டர் பிரைசஸ்(ஐஜிஇ) லண்டன் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்வால் இருவருமாக 2006-ம் ஆண்டு இண்டிகோ விமான சேவை நிறுவனத்தை தொடங்கினர். ராகேஷ் கங்வால் மற்றும் அவருடைய குடும்பத்தினர்களுக்கு இந்நிறுவனத்தில் 37 சதவீத பங்கும், ராகுல் பாட்டியா குழுமத்துக்கு 38 சதவீத பங்கும் உள்ளது. இருந்தும் ஒப்பந்தத்தின்படி ராகுல் பாட்டியா குழுமத்துக்கே கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் பாட்டியா நிறுவனத்தில் தன்னுடைய அதிகாரத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் மாற்றங்களை கொண்டுவர முயல்கிறார் என்று ராகேஷ் கங்வால் குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து இருவர்களுக்கிடையே மோதல் முற்றியது.
இந்நிலையில் இதற்கு உரிய தீர்வை பெறும் நோக்கில் ராகுல் பாட்டியா லண்டன் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த முறையீட்டில் எந்த ஒரு நஷ்ட ஈடும் கோரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.