மும்பை
மும்பையில் பிஎம்சி வங்கி மோசடி புகாருக்கு ஆளாகியுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம், போதுமான சொத்துக்களை அடமானம் வைத்தே கடன் பெற்றதாக விளக்கம் அளித்துள்ளது.
மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ஆர்பிஐ தடை விதித்தது.
ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் பல கோடி ரூபாய் கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாததால் இந்த நெருக்கடி ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தரவில் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1,000 மட் டுமே எடுக்க அனுமதிக்கப்படுவர் எனவும், புதிய கடன் வழங்குவது, புதிய டெபாசிட்களை ஏற்பது போன்ற நடவடிக்கைகளுக்கு 6 மாதம் தடை விதிப்பதாகவும் தெரிவித்தது.
இதனால் அனைத்து பிஎம்சி வங்கிக் கிளைகளிலும் வாடிக்கை யாளர்கள் பெருமளவில் குவிந்தனர். தங்களது சேமிப்புத் தொகை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பலர் அலை பாய்ந்தனர். முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக அனைத்து கிளைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டை குறைத்த ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.10 ஆயிரம் வரை தங்கள் சேமிப்பிலிருந்து எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தது.
இந்தநிலையில் பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வங்கி நிர்வாகம் மற்றும் கடன் வாங்கிய ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதனிடையே சம்பந்தபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் ‘‘போதுமான சொத்துக்கள் அடமானம் வைக்கப்பட்டே கடன் வாங்கியுள்ளோம். எந்த மோசடியும் செய்யவில்லை. தொழில் நஷ்டம் காரணமாகவே கடனை திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.