வணிகம்

ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினம்: மத்திய அரசு அறிவிப்பு

பிடிஐ

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 7 ம் தேதியை இந்திய கைத்தறி தினமாக அறிவிக்க உள்ளார். இந்த தேதியில்தான் 1905 சுதேசி போராட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பின் மூலம் உலகளாவிய சந்தைக்கு சர்வதேச தரத்தில் கைத்தறி பொருட்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க முடியும்.

செயலக அளவிலான குழு இதற்கான திட்டங்களை இறுதி செய்துள்ளது. ஆகஸ்ட் 7-ம் தேதி முறைப்படி அறிவிக்கப் படுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஜவுளித்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் பிரதமர் நரேந்திர மோடிக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி அன்று முதல் ‘தேசிய கைத்தறி தினம்’ அறிவிப்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் நெசவு தொழிலில் சிறந்து விளங்குபவர்களையும், குறிப்பிட்ட பிரபலங்களையும் அழைக்க அமைச்சகம் திட்டமிட் டுள்ளதாக இந்த கடிதத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்வதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் சிறப்பான தருணமாக இருக்கும் என்றும், எங்களது அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். கைத்தறி துறையின் இந்த முயற்சிக்கு நீங்கள் தூண்டுதலாக இருப்பீர்கள் என்று இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் சிறந்த தரத்திலான நம்பகமான தயாரிப்புகளை மேம்படுத்த முடியும். இந்திய கைத்தறி என்கிற முத்திரை மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாடிக்கை யாளர்களுக்கு தரமான தயாரிப் புகளைக் கொண்டு செல்ல முடியும்.

இதற்கான நிகழ்ச்சியில் சான் கபீர் விருது, 2012, 13, மற்றும் 2014ம் ஆண்டுக்கான சிறந்த நெசவாளர்களுக்கான விருதுகள் வழங்கவும் அமைச்சகம் திட்ட மிட்டுள்ளது.

ஆகஸ்ட் 7, 1905-ல் தான் கொல்கத்தாவில் சுதேசி போராட்டம் முன்னெடுக்கப் பட்டது, கொல்கத்தாவின் டவுன் ஹால் பகுதியில் பிரிட்டிஷ் பொருள்களுக்கு எதிராக உள்நாட்டு பொருட்களை ஆதரிப்பது என்கிற போரட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT