புதுடெல்லி
நிறுவனங்கள் அதன் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-க்குள் நிறுவனங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்தக் காலக்கெடு தற்போது அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தன. அதைத் தொடர்ந்து வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-லிருந்து அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வருமான வரிச் சட்டம் 44 ஏபி-யின் படி, நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள், அதன் பங்குதாரர்கள் உள்ளிட்டவர்களின் கணக்குகள் முதலில் தணிக்கை செய்யப்பட வேண்டும். அந்த தணிக்கை அறிக்கையைப் பெற்ற பிறகே அந்நிறுவனங்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியும். இந்நிலையில் அதற்கான காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது.