மும்பை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டின் முன்பு அமர்ந்து வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாகச் செயல்படும் என்ற அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இதுகுறித்து வெவ்வேறு விதமான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் சில வர்த்தக வங்கிகளை மூடப்போவதாக சமூகவலை தளங்களில் செய்திகள் வெளியாகின.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவலால் மகாராஷ்டிராவில் அந்த வங்கி கிளைகளில் கூட்டம் அலைமோதியது. பணத்தை எடுக்க மக்கள் முனைந்தனர். இதனால் அந்த வங்கி அதிகாரிகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகினர்.
இந்தநிலையில் வங்கிகள் சிலவற்றை மூட நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியான தகவலை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுபோலவே நிதித்துறைச் செயலாளர் ராஜீவ் குமார் கூறுகையில் ‘‘சில வர்த்தக வங்கிகளை மூட ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக சமூகவலை தளங்களில் வெளியான தகவல் முற்றிலும் தவறானது.
எந்த ஒரு வங்கியையும் மூடும் திட்டம் இல்லை. மாறாக வங்கிகளை வலிமையாக்கவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வங்கி சீர்த்திருத்தங்கள் அனைத்தும் இதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.
இந்தநிலையில் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி பெரும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வங்கியில் இருந்து மொத்தம் 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணம் ஹவுசிங் டெவலப்மெண்ட் அண்ட் இன்பிராஸ்டிரக்ச்சர் லிமிடெட் என்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் 2018-ம் ஆண்டு முதல் கடன் பெற்ற தொகையையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது. இதனால் வங்கி திவாலாகும் அளவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த தகவலே தவறாக பரவி மக்கள் வங்கியில் இருந்த பணத்தை எடுத்துச் செல்லும் சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி ஊழியர்கள் இன்று கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் உரிமையாளர்கள் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். உடனடியாக கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அவர்களை கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.