வணிகம்

இபிஎப் வட்டி 8.65% ஆக நிர்ணயம்: தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உயர்த்தப்படுவதாக சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்தார்.

முறைபடுத்தப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளார்கள் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்று அவர்களது அடிப்படை சம்பளத்திலிருந்து 12 சதவீதம் பிடிக்கப்படுகிறது.

அந்த தொகையுடன், அதே அளவு தொகையை நிறுவனப் பங்களிப்பாக சேர்த்து, தொழிலாளர்களது பிஎப் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாகவே இபிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டே வந்தது. 2017- 2018-ம் நிதியாண்டில் 8.55 சதவீதத்தில் இருந்து 2018- 2019-ம் நிதியாண்டில் 8.65 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஆனால் இதற்கு நிதியமைச்சகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதமே இதற்கான முடிவு எடுக்கப்பட்ட விட்டபோதிலும் கூட நிதியமைச்சகத்தின் ஒப்புதல் கிடைக்காததால் முடிவெடுப்பதில் தாமதம் நிலவி வந்தது.

வங்கி வட்டி, பொது மக்களுக்கான வருங்கால வைப்பு நிதி என பல திட்டங்களுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வரும் நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்த மத்திய நிதியமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தநிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்து பேசினார். அப்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை அதிகரிக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு நிதியமைச்சகமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையடுத்து வருங்கால வைப்பு நிதிக்கு 2018- 2019 நிதியாண்டில் வழங்கப்படும் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக இருக்கும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் கூறியுள்ளார். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

SCROLL FOR NEXT