புதுடெல்லி, பிடிஐ
உற்பத்தித்துறையின் மந்தமான நிலை காரணமாக தொழிற்துறை உற்பத்தி ஜூலை மாதத்தில் 4.3% ஆகக் குறைந்ததாக வியாழனன்று வெளியிடப்பட்ட அரசு தரவு வெளியீடு கூறியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 7% ஆக இருந்தது.
தொழிற்துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) அளவுகளின்படி தொழிற்சாலை உற்பத்தி கடந்த ஜூலை 2018-ல் 6.5% விரிவாக்கம் பெற்றுள்ளது. தொழிற்துறை வளர்ச்சி இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1.2% ஆகவும் இந்த ஆண்டு மே மாதத்தில் 4.2% ஆகவும் பதிவாகியுள்ளது.
மத்திய புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கப் பிரிவு வெளியிட்ட தரவுகளின் படி இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூனில் தொழிற்துறை உற்பத்தி 3.3% என்ற விகிதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 5.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தித் துறையில் பரிசீலிக்கத்தக்க மந்தநிலை இருந்து வருவதாக ஐஐபி தரவு தெரிவித்துள்ளது, அதாவது கடந்த ஆண்டு ஜூலைவாக்கில் 7% ஆக இருந்த வளர்ச்சி ஜூலை 2019-ல் 4.2% ஆகக் குறைந்துள்ளது.
தொழிற்துறைகளின் படி உற்பத்தித் துறையில் 23 தொழிற்துறை குழுமங்களில் 13-ல் வளர்ச்சி காணப்படுகிறது.
உணவுப்பொருள் உற்பத்தி தொழிற்துறை 23.4% வளர்ச்சியும் அடிப்படை உலோக உற்பத்தி 17.3%-ம் ஆயத்த ஆடைத் தயாரிப்பில் 15% வளர்ச்சியும் உள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
காகித மற்றும் காகித உற்பத்தித் தொழிற்சாலை, மோட்டார் வாகனங்கள், ட்ரெய்லர் மற்றும் செமி ட்ரெய்லர் வாகன் உற்பத்திப் பிரிவு பிரிண்டிங் மற்றும் ரெக்கார்டட் மீடியா மறு உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது.