புதுடெல்லி
உற்பத்தி துறைகளின் வளர்ச்சி வீதம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், சேவைத் துறைகளின் வளர்ச்சி யும் சரிவைக் கண்டுள்ளன. பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் சேவைத் துறைகளின் பிஎம்ஐ 52.4 ஆக குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் அது 53.8 ஆக இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில் உற்பத்தி துறைக்கான பிஎம்ஐ 52.5 ஆக இருந்தது. அது ஆகஸ்ட் மாதத்தில் 51.4 ஆக குறைந்துள்ளது. அதே போல், உற்பத்தி மற்றும் சேவை துறைகள் இரண்டுக்குமான பிஎம்ஐ ஆகஸ்ட் மாதத்தில் 52.6 ஆக குறைந்துள்ளது. ஜூலையில் அது 53.9 ஆக இருந்தது.
பொருளாதார ஆய்வு நிறுவனமான ஐஹெச்எஸ் மார்கிட் இந்தியா, இந்திய நிறு வனங்களின் வணிகப் போக்குகளை ஆய்வு செய்து வருகிறது. போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் துறை, தொலை தொடர்பு, நிதி, காப்பீடு போன்ற பல்வேறு சேவை துறை கள் சார்ந்த 400-க்கும் மேற்பட்ட நிறுவனங் களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப் படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, முடிந்த ஆகஸ்ட் மாதத்தில் சேவைத் துறைகளின் வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விதம் 5 சதவீதமாக குறைந்திருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் மாத நிலவரத்திலும் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி குறைந்து இருக்கிறது. இதனால் இந்த நிதியாண்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி வீதம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது இந்தியா கடும் பொருளாதார மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதனால் உற்பத்திக்கான தேவை குறைந்துள்ளது. இவை அனைத்தின் விளைவாக வரி வருவாயும் குறைந்துள்ளது. மின்சார உற்பத்தி, இரும்பு உற்பத்தி போன்ற நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் 8 துறைகளின் வளர்ச்சி வீதம் ஜூலையில் 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்துறைகள் சந்தித்திராத சரிவாகும். இதுபோன்ற பல்வேறு காரணிகளால் நாட்டின் வளர்ச்சி வீதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் குறைந்துள்ளது.
இந்நிலையில் நிறுவனங்களின் நெருக்கடிகளை சரி செய்யும்பொருட்டு கடந்த மாதம் மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்துள்ளது. அடுத்த 12 மாதங்களில் சேவைத் துறைகள் மற்றும் உற்பத்தி துறைகள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியா கடும் பொருளாதார மந்த நிலையை எதிர் கொண்டு வருகிறது. மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இதனால் உற்பத்திக்கான தேவை குறைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் 8 துறைகளின் வளர்ச்சி வீதம் ஜூலையில் 2.1 சதவீதமாக குறைந்துள்ளது.