பிரதிநிதித்துவப்படம் 
வணிகம்

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு: விமான எரிபொருள் விலை குறைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் காரணமாக விமான எரிபொருளின் விலை ஒரு சதவீதம் குறைத்தும், மானியமில்லாமல் சந்தையில் வாங்கப்படும் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.15.50 பைசா உயர்த்தியும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

விமானங்களுக்குப் பயன்படும் எரிபொருள் விலை லிட்டருக்கு ஒரு சதவீதம் அதாவது ரூ.596.62 பைசா குறைக்கப்பட்டு, கிலோ லிட்டர் ரூ.62,698.86 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3-வது மாதமாக விமான எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள் பல இடர்ப்பாடுகளில் இருந்து வரும் நிலையில் இந்த விலைக் குறைப்பு பெரும் நிம்மதியை அளிக்கும்.

சந்தையில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஒன்றுக்கு ரூ.15.50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சந்தையில் ரூ.574.50 பைசாவுக்கு விற்பனையான சிலிண்டர் இனி ரூ.590 ஆக விலை உயர்த்தப்படுகிறது.

மேலும், கிராமங்களில் மானிய விலையில், ரேஷன் கடைகளில் சமானிய மக்களுக்கு விற்பனை செய்யப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 25 காசுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் மாதம் தோறும் 25 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது. மானியம் மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும்வரை தொடர்ந்து 25 பைசா உயர்த்தப்பட்டு வருகிறது.

சந்தையில் மானியமில்லாத மண்ணெண்ணெய் விலை லிட்டர் ரூ.66.58 ஆக இருக்கிறது.

பிடிஐ

SCROLL FOR NEXT