புதுடெல்லி
வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதியே கடைசி நாள் என மத்திய நேரடி வரி வாரியம் தெளிவுபடுத்தியள்ளது.
2018-19 வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி இறுதிக் கெடு மத்திய நேரடி வரி வாரியம் அறிவித்தது.
ஆனால் தனிநபர் வரிசெலுத்துவோர் சமூகவலைத்தளங்களிலும் பிற ஊடகங்கள் வாயிலாகவும் இறுதிக் கெடுவை நீட்டிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
ஜூலை 31ம் தேதி வருமானவரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய போதிய ஆவணங்களை தாங்கள் இன்னும் பெறவில்லை என்று இவர்கள் நீட்டிப்புக் கோரிக்கையை வைத்தனர், அதற்கு இசைந்து மத்திய நேரடி வரி வாரியம் ஏற்றுக் கொண்டு கடைசி தேதியை ஆகஸ்ட் 31ம் தேதிவரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த இறுதிக் கெடு, தனிநபர்கள், தனிநபர்கள் அமைப்பு, இந்து கூட்டுக்குடும்பம், நபர்கள் கூட்டமைப்பு ஆகியோருக்கு இந்த இறுதிக் கெடு பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து வருமான வரி தாக்கல் தொடர்பாக நேரடி வரிகள் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை ட்விட்டர் பக்கத்தில் ‘‘வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருவதாக தெரிய வருகிறது. இதில் உண்மையில்லை. எனவே வரி செலுத்துவோர் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.