வணிகம்

ஷேர்கான் நிறுவனத்தை வாங்குகிறது பிஎன்பி பரிபா

பிடிஐ, ராய்ட்டர்ஸ்

பிரான்ஸ் நாட்டின் நிதிச்சேவை நிறுவனமான பிஎன்பி பரிபா நிறுவனம் இந்திய புரோக்கரேஜ் நிறுவனமான ஷேர்கான் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்க முடிவெடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கை மூலம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்த பிஎன்பி பரிபா நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

எவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் இந்த 2,000 கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பாவில் ரீடெய்ல் புரோக்கிங் மற்றும் டிஜிட்டல் வங்கி பிரிவில் 17 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎன்பி பரிபா நிறுவனத்துக்கு இருக்கிறார்கள்.

ஷேர்கான் நிறுவனம் வழக்கம் போல சிறு முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து வகை யான முதலீட்டுத் திட்டங்களை யும் கொண்டு செல்லும். இதில் மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட அனைத்து சேமிப்பு திட்டங்களும் அடக்கம் என்று பிஎன்பி பரிபா நிறுவனத்தின் இந்திய பிரிவுத்தலைவர் ஜோரிஸ் டீர்க்ஸ் தெரிவித்தார். மேலும் ஷேர்கான் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்தியாவில் எங்களது சந்தையை மேலும் விரிவுபடுத்த வாய்ப்பு உருவாகி இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த ஆறு மாத காலமாக ஷேர்கான் நிறுவனத்தை விற்பது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஷேர்கான் நிறுவனத்தை வாங்கு வதற்கு ஆர்வமாக இருந்தார்கள். இறுதியில் பின்வாங்கிவிட்டார்கள். இப்போது பிஎன்பி பரிபா நிறுவனம் வாங்கி இருக்கிறது.

ஷேர்கான் நிறுவனம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. புரோக்கரேஜ் சேவைகளை 2000-ம் ஆண்டில் இருந்து செய்து வருகிறது. 2000-ம் ஆண்டு ஹெச்.எஸ்.பி.சி. பிரைவேட் ஈக்விட்டி, இன்டெல் பசிபிக் மற்றும் கார்லைல் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து முதலீட்டை திரட்டியது. 2006-ம் ஆண்டு ஜிஏ குளோபல் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து கார்லைல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது.

2007-ம் ஆண்டு சிவிசிஐ, சமரா கேபிடல் மற்றும் ஐடிஎப்சி ஆகிய நிறுவனங்கள் ஷேர்கான் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை வாங்கின. 2008-ம் ஆண்டு மேலும் சில பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தன.

ஷேர்கான் இந்தியாவில் மூன்றாவது பெரிய புரோக்கரேஜ் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 7 சதவீத சந்தையை வைத்திருக்கிறது. 12 லட்சம் வாடிக்கையாளார்கள் இந்த நிறுவனத்துக்கு இருக்கிறார்கள். கடந்த 12 வருடங்களாக தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிஎன்பி பரிபா நிறுவனம் 75 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 1,85,000 பணியாளர்கள் இருக்கிறார்கள். இதில் 1.45 லட்சம் பணியாளர்கள் ஐரோப்பாவில் மட்டுமே இருக்கிறார்கள்.

2008-ம் ஆண்டு பங்குச்சந்தை சரிவுக்கு பிறகு சில்லரை முதலீட் டாளர்கள் பங்குச்சந்தையை விட்டு வெளியேறிவிட்டனர். இப்போது பங்குச்சந்தை உயர்ந்து வருவதால் அவர்கள் மீண்டும் பங்குச்சந்தை முதலீட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் இந்த துறைக்கு எதிர்காலம் இருப்பதாக துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

பிஎன்பி பரிபா நிறுவனம் இதே துறையில் இருக்கும் ஜியோஜித் பிஎன்பி பரிபா நிறுவனத்தில் 34 சதவீத பங்குகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2007-ம் ஆண்டு இந்த முதலீட்டை செய்தது. இந்த நிறுவனத்தில் 7.5 லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT