புதுடெல்லி,
பண்டிகைக் காலம் வருவதையொட்டி, வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங் ஆப் இந்தியா (எஸ்பிஐ) இன்று அறிவித்துள்ளது.
குறைந்த வட்டியில் வீடு, வாகனக் கடன் உள்ளிட்டவற்றைப் பெறுவதோடு, அதற்கான செயல்பாட்டுக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது. டிஜிட்டல் முறையில் முன்ஒப்புதல் பெறப்பட்ட கடன், கடனுக்கான வட்டி ஏற்றப்படாது போன்ற பல்வேறு சலுகைகளையும் எஸ்பிஐ வங்கி அளித்துள்ளது.
இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
“பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாகனக் கடன்களுக்கான செயல்பாட்டுக் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது. வாகனக் கடனுக்கு குறைந்தபட்சமாக 8.70 சதவீதத்தில் இருந்து வட்டி வீதம் தொடங்குகிறது, வட்டி வீதத்தில் எந்தவிதமான மாறுபாடு ஏற்பட்டாலும் நிலையாக இருக்கும். உயர்த்தப்படாது.
வாடிக்கையாளர்கள் வாகனக் கடனை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதாவது வங்கியின் இணையதளம், 'யோனோ' ஆகியவற்றின் மூலம் விண்ணப்பம் செய்தால், வட்டியில் 25 புள்ளிகள் சலுகை தரப்படும். மாத ஊதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வாகனக் கடன் 90 சதவீதம் வரை வழங்கப்படும்,
வீட்டுக் கடனைப் பொறுத்தவரை மிகக்குறைந்த வட்டியாக 8.05 சதவீதத்தில் இருந்து வழங்கப்படுகிறது. இந்த ரெப்போ-ரேட்டுன் இணைக்கப்பட்ட வீட்டுக்கடன் வரும் செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து ஏற்கெனவே பெற்று இருக்கும் கடன் மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் அடுத்து வாங்கும் கடன்களுக்கும் பொருந்தும்.
தனிப்பட்ட கடன்களைப் பொறுத்தவரை ரூ.20 லட்சம் வரை மிகக்குறைந்த அளவாக 10.75 சதவீதம் வட்டியில், நீண்டகாலத்துக்கு அதாவது 6 ஆண்டுகளுக்கு செலுத்தும் வகையில், மாதம்தோறும் இஎம்ஐ சுமையை குறைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக, மாத ஊதியம் பெறும் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே ஒப்புதல் பெறப்பட்ட 'யோனோ'(YONO) மூலம் ரூ.5 லட்சம் வரை டிஜிட்டல் கடன் பெற முடியும்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பயில்வதற்கான கல்விக்கடன் ரூ.50 லட்சம் முதல் ரூ.1.50 கோடிவரை ஆண்டுக்கு 8.25 சதவீதம் வட்டியில் எஸ்பிஐ வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் இஎம்ஐ சுமையைக் குறைக்கும் பொருட்டு நீண்டகாலமாக 15 ஆண்டுகளுக்குச் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது”
இவ்வாறு எஸ்பிஐ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஐ