வணிகம்

தீபாவளிக்குள் தங்கம் விலை எவ்வளவு உயரும்?- வர்த்தகர்கள் தகவல்

செய்திப்பிரிவு

மும்பை

10 கிராம் சுத்த தங்கத்தின் விலை தீபாவளிக்குள் 40 ஆயிரம் ரூபாயாக உயர வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகளாவிய பொருளாதாரச் சூழலால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தகச் சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது.

இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கணிசமாக உயர்ந்த வந்தது. இந்த வாரத்தில் 29 ஆயிரம் ரூபாய் வரை தங்கம் விலை உயர்ந்தது. பின்னர் சற்று குறைந்துள்ளது.

இந்தநிலையில் தங்கத்தின் விலை தீபாவளி சீசனில் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கமாடிட்டி சந்தையில் 10 கிராம் கொண்ட சுத்த தங்கத்தின் ஒப்பந்த விலை 37,995 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமாடிட்டி சந்தை வர்த்தக ஆலோசகர் அனுஜ் குப்தா கூறுகையில் ‘‘அமெரிக்கா - சீனா இடையில் தற்போது வர்த்தக பதற்றம் சற்று குறைந்துள்ளதால் தங்கத்தின் விலை இரண்டு நாட்களாக குறைந்துள்ளது.

இது தற்காலிக நிலை தான். ஆனால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் பொதுவாக ஏறுவதற்கே வாய்ப்புள்ளது. தீபாவளி சமயத்தில் 10 கிராம் கொண்ட சுத்த தங்கம் 40 ஆயிரம் ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது’’ எனக் கூறினார்.

சுத்த தங்கத்தை விலை உயர்வையொட்டி ஆபரண தங்கத்தின் விலை உயர்வும் இருக்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10 கிராம் சுத்த தங்கத்தின் விலை இன்றைய விலை 37640 ரூபாயாக உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு( 8 கிராம்) ரூ. 28856-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 3607 -க்கு விற்பனையாகிறது

SCROLL FOR NEXT