புதுடெல்லி
இந்தியாவில் போலி தயாரிப்புகள் சந்தையில் கலப்பதால் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.
அதன்டிகேஷன் சொல்யூஷன் புரொவைடர்ஸ் அசோசியேஷன் (ஏஎஸ்பிஎ) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் பல்வேறு துறைகளில் போலி தயாரிப்புகளின் கலப்படம் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மருந்து தயாரிப்பில் பெருமளவிலான போலி தயாரிப்புகள் இருப்பதால் மக்களின் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கிறது.
இந்தியச் சந்தைகளில் போலி தயாரிப்புகள் போன்ற ஆர்கனைஸ்டு குற்றங்களால் அரசுக்கும் நிறுவனங்களுக்கும் ரூ. 1.05 லட்சம் கோடி அளவிலான இழப்பு ஓராண்டில் ஏற்படுவதாகக் கூறுகிறது. போலி தயாரிப்புகளைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் மற்றும் விழிப்புண்ர்வு அவசியம் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி தயாரிப்புகளை 50 சதவீதம் குறைக்க முடிந்தால் கூட இந்தியப் பொருளாதாரத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று ஏஎஸ்பிஎ தெரிவித்துள்ளது.
உலக அளவில் போலி தயாரிப்புகள் 3.3 சதவீத அளவில் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி தயாரிப்புகள் சந்தையில் கலப்பதைத் தவிர்க்க, டிராக்கிங், டிரேசிங் மற்றும் ஆன்ட்டி-டேம்பரிங் போன்றவற்றில் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.