புதுடெல்லி
உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது இடத்தில் இருந்துவந்த இந்தியா, தற்போது ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்
ளது. ஐந்து மற்றும் ஆறாம் இடங்களை பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து பிடித்துள்ளன.
2017-ம் ஆண்டு உலக வங்கி மேற்கொண்ட ஆய்வில், உலகப் பொருளாதார வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் 2018–ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வரிசையில் இந்தியா வின் இடம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2018–ம் ஆண்டு கணக்கின்படி, இந்தியா உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏழாவது இடத்தில் உள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவால் இந்தப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
2017–ம் ஆண்டில் இந்தியா 2.65 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஐந்தாவது இடத்தில் இருந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் முறையே 2.64 டிரில்லியன் டாலர் மற்றும் 2.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் இருந்தன.
2018-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 2.7 டிரில்லியன் டாலராக உள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பொருளாதாரம் தலா 2.8 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதனால் பிரான்ஸ் ஆறாவது இடத்துக்கும், இங்கிலாந்து ஐந்தாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளன. ஜெர்மன் நான்காவது (4 டிரில்லியன்) இடத்தில் உள்ளது. அமெரிக்கா 20.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் முதல் இடத்திலும், 13.6 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட சீனா இரண்டாவது இடத்திலும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதரத்தைக் கொண்ட ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது நடந்துவரும் வர்த்தகப் போர் காரணமாக நடப்பு நிதி ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி சற்று சரிவைக் காணலாம் என்று கூறப்படுகிறது.
2017–ம் ஆண்டில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 3 சதவீதம் உயர்ந்திருந்த நிலையில், 2018–ம் ஆண்டில் 5 சதவீதம் குறைந்தது. இதனால் 2018-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சற்றே பின்தங்கிஉள்ளது என்று இந்தியா ரேட்டிங் மற்றும் ஆய்வு மையத்தின் தலைமை பொருளாதார நிபுணர் தேவந்திர பாண்ட் கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின் போது, இந்தியா 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
அந்த சமயம் 2018-19 ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை, 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டவேண்டுமென்றால் இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கிரிஸில் நிறுவனம் தற்போது உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியாவின் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.9 சதவீதமாக இருக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் தருணத்தில் இந்தப் பின்னடைவு செய்தி ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.