வணிகம்

தங்கத்தின் விலை மேலும் உயரும்: நகைக்கடை உரிமையாளர் சங்கம்

செய்திப்பிரிவு

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாகக் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், விலை மேலும் அதிகரிக்கும் என்று சென்னை நகைக்கடை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய பொருளாதார சூழலால்  அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் சூழல் உள்ளது. அமெரிக்கா- சீனா வர்த்தகப் பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.  இதுபோலவே, ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ப் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதுமட்டுமின்றி சில ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் பொதுவாக காணப்படும் வர்த்தக சுணக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. 

இதனால்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது.

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்றம் ஓரளவு கட்டுக்குள் இருந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்தது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் விலை 584 ரூபாய் உயர்ந்து ரூ.27,064 ஆக விற்பனை ஆகி வருகிறது.

இந்நிலையில் தங்கத்தின் விலை ஏற்றம் குறித்துப் பேசிய சென்னை நகைக்கடை உரிமையாளர் சங்கத்தின் உரிமையாளர் ஜெயந்திலால் சலானி, ''உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. அதன் தாக்கம்தான் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. இதனாலேயே தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து 27 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது.

இந்த விலை உயர்வு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சியாலும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா பின் தங்கி இருப்பதாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் தங்கம் விலை மேலும் உயரும்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT