வணிகம்

தனியார் நிறுவனங்களுக்கு சவாலான காலம், குஜராத் வளர்ச்சி மாதிரியைக் கடைபிடியுங்கள்: பிரதமர் மோடிக்கு எல்&டி சேர்மன் கோரிக்கை

செய்திப்பிரிவு

மும்பை:

நாட்டில் தனியார் துறை நிறுவனங்களுக்கு இது சவாலான காலக்கட்டமாக இருந்து வருகிறது, குஜராத் வளர்ச்சி மாதிரிக்குத் திரும்ப வேண்டும் என்று லார்சன் அண்ட் டூப்ரோ சேர்மன் ஏ.எம்.நாயக் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களிடம் பேசிய ஏ.எம்.நாயக், “வளர்ச்சிக்காக செலவிடுவது என்பது அமலுக்கு வர ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம். முதலீடு என்ற மட்டத்தில் தனியார் துறைகளுக்கு இது சவாலான காலக்கட்டமாக அமைந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள்தான் தங்களிடம் இருப்பதை தக்கவைக்க முடிகிறது. 

பல நிறுவனங்கள் கடனை அடைக்க விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இந்த ஆண்டு 6.5% ஆக இருக்கும். ஆனால் இது 7% ஆகும் என்று அரசு கணித்துள்ளது, இது நடந்தால் அதிர்ஷ்டம்தான். 

அரசு சொல்வதை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. இதை ஒருவர் முடிவு செய்ய வேண்டும்.

அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்ட வர்த்தக சிக்கல்களை இந்தியா இதுவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நிறைய தொழிற்துறைகள் தாய்லாந்து, வியட்நாமுக்கு சென்றுள்ளது, அவை ஏன் இந்தியாவுக்கு வரவில்லை? நாம் தேர்தல்களில் இருந்தோம் அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது ஏதாவது செய்ய வேண்டும். 

பிரதமர் நரேந்திர மோடி தன் குஜராத் மாதிரி வளர்ச்சியைப் பின்பற்றி தொழிற்துறை அனுமதிகளை துரிதப்படுத்த வேண்டும்” என்றார் ஏ.எம்.நாயக்.

-தி இந்து பிசினஸ்லைன்

SCROLL FOR NEXT